ADDED : டிச 12, 2025 06:32 AM

சர்வதேச அளவிலான, 'டி - 20' கிரிக்கெட் லீக் போட்டிகளில் இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., எனும் பிரீமியர் லீக் போட்டி மிகவும் முக்கியமானது. இதில், தனது திறமையை நிரூபிக்கும் புதுமுக அறிமுக வீரர் இந்திய கிரிக்கெட் அணியில் நேரடியாக தேர்வு பெறுவதற்கான வாய்ப்பு அதிகம்.
இதன் மூலமே ஐ.பி.எல்., போட்டிகளின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி, பாகிஸ்தான் தவிர மற்ற நாடுகளில் உள்ள சிறந்த வீரர்களும் பங்கேற்கும் ஒரே லீக் போட்டி, இந்தியாவில் நடக்கும் ஐ.பி.எல்., தான்.
இதனாலே, பல நாட்டினரும் ஐ.பி.எல்.,ஐ விரும்பி பார்க்கின்றனர். இப்படிப்பட்ட போட்டியில் தாங்களும் விளையாடி தங்கள் திறமையை நிறைவேற்றி கொள்ள வேண்டும் என, வாய்ப்புக்காக காத்திருக்கும் இளம் வீரர்கள் ஏராளம். இவர்கள், தங்கள் பெயரை ஐ.பி.எல்., மினி ஏலத்திற்கு பதிவு செய்து உள்ளனர். இந்த ஏலம் வரும் 16ம் தேதி அபுதாபியில் நடக்கிறது. அனைத்து அணிகளும் போட்டி போட்டு கொண்டு பணத்தை செலவிட்டு வீரர்களை வாங்க முற்படுவர்.
இந்த மினி ஏலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்திய, வெளிநாட்டு வீரர்கள் தங்கள் பெயர்களை தேர்வு செய்தனர். இதில், தகுதியானவர் என 359 வீரர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த பட்டியலில் கர்நாடகாவை சேர்ந்த 14 வீரர்களின் பெயர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இதில், 13 பேர் அறிமுக வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இந்திய அணிக்கு விளையாடாதவர்கள். இதில், மயங்க் அகர்வால் மட்டுமே இந்திய அணிக்காக விளையாடிய வீரர் ஆவார்.
இந்த வீரர்களை ஏலத்தில் எடுக்க குறைந்தபட்ச தொகை 20 லட்சம் ரூபாய் ஆகும். இந்த லிஸ்டில் உள்ள வீரர்களில் மயங்க் அகர்வால், அபினவ் மனோஹர், பிரவின் டுபே, மன்வன்த் குமார் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் போகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது
- நமது நிருபர் -:.

