கோலார் காங்., - எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் டி.சி.சி., வங்கி தலைவராக போட்டியின்றி தேர்வு
கோலார் காங்., - எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் டி.சி.சி., வங்கி தலைவராக போட்டியின்றி தேர்வு
ADDED : செப் 08, 2026 03:57 AM

கோலார்: டி.சி.சி., வங்கி எனும் கோலார், சிக்கபல்லாப்பூர் மத்திய கூட்டுறவு வங்கியின் புதிய தலைவராக கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத், துணைத் தலைவராக மோகன் ரெட்டி ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
டி.சி.சி., வங்கிக்கு 2025 மே மாதம் இயக்குனர் தேர்தல் நடந்தது. 18 இயக்குனர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் இரண்டு இயக்குனர்களின் தேர்வில் குளறுபடி இருந்ததாக கூறி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதனால் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படவில்லை.
தேர்தல் நடத்த வேண்டும் என்று கோலார், சிக்கபல்லாப்பூர் தொகுதி எம்.எல்.ஏ.,க்கள் முதல்வர் டி.கே.சிவகுமாரை ஆகஸ்ட் 6 ம் தேதி சந்தித்தனர். வெற்றிப்பெற்றவர்களில் 14 பேர், காங்கிரசை சேர்ந்தவர்கள். எனவே டி.சி.சி., வங்கி தலைவர், துணைத் தலைவர் தேர்தலை நடத்த மாவட்ட கலெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்க வலியுறுத்தினர். இதற்கு இசைந்து விரைந்து தேர்தல் நடத்த உத்தரவிட செப்டம்பர் 7 ல் தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப் பட்டது.
தலைவர் பதவிக்கு கோலார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., கொத்துார் மஞ்சுநாத் பெயரை, பாகேபள்ளி காங்கிரஸ் எம்.எல்.ஏ., சுப்பா ரெட்டி முன்மொழிய, பங்கார்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., எஸ்.என்.நாராயணசாமி, மாலுார் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., நஞ்சே கவுடா ஆகியோர் வழிமொழிய நேற்று காலை 10:00 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டது. இவரை எதிர்த்து யாரும் போட்டியிட வில்லை. எனவே கொத்துார் மஞ்சுநாத், டி.சி.சி., வங்கியின் புதிய தலைவராக தேர்வானார். அதேபோல துணைத் தலைவராக மோகன் ரெட்டி போட்டியின்றி தேர்வானார்.
கோலாரில் மஞ்சுநாத் ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
