கோலார் அரசியலில் கோலோச்ச முனியப்பா திட்டம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி
கோலார் அரசியலில் கோலோச்ச முனியப்பா திட்டம் மாவட்ட பொறுப்பு அமைச்சர் பதவி கேட்டு நெருக்கடி
ADDED : ஜூன் 10, 2026 03:12 AM

- நமது நிருபர் - கர்நாடக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவர் முனியப்பா, 78. கோலார் லோக்சபா தொகுதியில் ஏழு முறை எம்.பி.,யாக வெற்றி பெற்றவர். மத்திய ரயில்வே, சாலை போக்குவரத்து, சிறு தொழில் இணை அமைச்சராக பணியாற்றியவர். 2019ல் நடந்த லோக்சபா தேர்தலில் தோற்றார்.
இதனால் மாநில அரசியலில் கால்பதித்தார். 2023 சட்டசபை தேர்தலில் பெங்களூரு ரூரல் மாவட்டம் தேவனஹள்ளி தொகுதியில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ., ஆனார். சித்தராமையா அமைச்சரவையில் உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சராக பணியாற்றினார்.
பெங்களூரு ரூரல் மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். கோலாரும், பெங்களூரு ரூரலும் பக்கத்து மாவட்டங்கள் என்றாலும், கோலாரில் முனியப்பாவால் செல்வாக்கு செலுத்த முடியவில்லை.
முதல்வர் பதவி இந்நிலையில், சிவகுமார் அமைச்சரவையிலும், முனியப்பாவுக்கு அவர் வகித்த அதே துறை கிடைத்துள்ளது. தன் அமைச்சரவையில் வயதானவர்களை ஓரம் கட்டி விட்டு, இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க சிவகுமார் திட்டமிட்டு இருந்தார். ஆனால், தன் செல்வாக்கை பயன்படுத்தி, முனியப்பா மீண்டும் அமைச்சராகி விட்டார். சித்தராமையா, சிவகுமார் இடையில், முதல்வர் பதவிக்காக பிரச்னை இருந்த போது, கட்சி மேலிடம் எஸ்.சி., சமூகத்தை சேர்ந்தவரை முதல்வராக வேண்டும் என்று நினைத்தால், தன்னை முதல்வராக்க வேண்டும் என்றும், தனக்கு தெரிந்த மேலிட தலைவர்களிடம் முனியப்பா, 'டீல்' பேசி வந்தார். சிவகுமார் அமைச்சரவையில் துணை முதல்வர் பதவி வேண்டும் என்றும் நச்சரிக்க ஆரம்பித்துள்ளார்.
ஒட்டி உறவாடல் ஆனால், எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த பரமேஸ்வருக்கு, துணை முதல்வர் பதவி கிடைத்ததால், தன் அதிருப்தியை வெளிப்படுத்துவதற்காக, எனக்கு ஒதுக்கிய துறை சரியில்லை என்றும், சமூக நலத்துறை வேண்டும் என்று கேட்டு முரண்டு பிடித்தார். அவரை, ராகுல் சமாதானம் செய்தார். இந்நிலையில், கோலார் அரசியலில் மீண்டும் கோலோச்ச நினைக்கும் முனியப்பா, கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சராக தன்னை நியமிக்க, சிவகுமாருக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்துள்ளார். கட்சி மேலிடத்திடமும் இதுபற்றி கூறியுள்ளார்.
கோலார் மாவட்டம் தன் கையில் கிடைத்தால், அரசியல் எதிரிகளின் குடுமியை பிடித்து விடலாம்; தான் நினைத்ததை செய்யலாம் என்று கணக்கு போட்டு உள்ளார்.
முனியப்பாவின் அரசியல் எதிரியான காங்கிரஸ் முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமாரும், இப்போது முனியப்பாவுடன் ஒட்டி உறவாட துவங்கியுள்ளார். இதனால், 'கோலாரில் நான் வைத்தது தான் சட்டம்' என்ற மனநிலையில் முனியப்பா உள்ளார். தங்கவயல் தொகுதியில், தனது மகள் ரூபகலாவை இரண்டு முறை வெற்றி பெற வைத்த முனியப்பா, மகளுக்கு எதிராக போட்டியிட்டவர்களை விலை கொடுத்து வாங்கி விட்டார் என்று தங்கவயலே பேசுகிறது.
இரண்டாவது மகள் நந்தினியையும் எம்.எல்.ஏ., ஆக்க வேண்டும். அவரது கணவரை கோலார் எம்.பி., ஆக்க வேண்டும் என, எதிர்கால அரசியல் திட்டங்களையும் போட்டுள்ளார், முனியப்பா.
