/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கிருஷ்ணய்ய ஷெட்டிக்கு மோசடி வழக்கில் '3 ஆண்டு'
/
கிருஷ்ணய்ய ஷெட்டிக்கு மோசடி வழக்கில் '3 ஆண்டு'
ADDED : பிப் 07, 2025 05:00 AM

பெங்களூரு: வங்கியில் கடன் வாங்கி, அடைக்காமல் மோசடி செய்த பா.ஜ.,வின் முன்னாள் அமைச்சர் கிருஷ்ணய்ய ஷெட்டிக்கு, மூன்று ஆண்டு சிறை தண்டனை விதித்து, மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பா.ஜ.,வின் கிருஷ்ணய்ய ஷெட்டி, கோலார், மாலுாரின் முன்னாள் எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சராக இருந்தவர். இவர் 2012ல் பாலாஜி கிருபா எண்டர்பிரைசஸ் நிறுவன உரிமையாளராக இருந்தார். அரசு சார்ந்த நிறுவனங்களின் ஊழியர்களுக்கு, வீடு கட்டும் திட்டத்தை கொண்டு வருவதாக, தனியார் வங்கியில் கடன் கேட்டார்.
ரூ.7 கோடி கடன்
இதற்காக கே.எஸ்.ஆர்.டி.சி., -- பி.எம்.டி.சி., - பி.எஸ்.என்.எல்., - ஐ.டி.ஐ., - ஹெச்.ஏ.எல்., - பி.டி.எஸ்., உட்பட பல்வேறு நிறுவனங்களின் 181 ஊழியர்களின் போலியான ஆவணங்களை உருவாக்கி, வங்கியில் சமர்ப்பித்து 7.17 கோடி ரூபாய் கடன் பெற்றார். இதில் 3.53 கோடி ரூபாய் கடனை அடைக்கவில்லை.
இது தொடர்பாக, சி.பி.ஐ.,யில் வங்கி நிர்வாகம் புகார் அளித்தது. புகாரின் அடிப்படையில் கிருஷ்ணய்ய ஷெட்டி, முனிராஜு, சீனிவாஸ், எம்டிபி ரெட்டி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
குற்றபத்திரிகை
பின், மக்கள் பிரதிநிதிகள் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றபத்திரிகை தாக்கல் செய்தனர். நால்வரையும் குற்றவாளிகள் என, நீதிமன்றம் நேற்று காலை உறுதி செய்தது; மாலையில் தண்டனை அறிவித்தது. நால்வருக்கும் மூன்று ஆண்டு சிறை தண்டனை, தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி சந்தோஷ் கஜானன் பட் தீர்ப்பளித்தார்.
கிருஷ்ணய்ய ஷெட்டிக்கு விதிக்கப்பட்ட தண்டனையை, ஒரு மாதம் நிறுத்தி வைத்து, அவருக்கு ஜாமின் வழங்க வேண்டும் என, அவரது தரப்பு வக்கீல் நாகேந்திர நாயக், வேண்டுகோள் விடுத்தார். இதை ஏற்று கொண்ட நீதிபதி, 5 லட்சம் ரூபாய் பாண்ட், ஒருவரின் உத்தரவாதம் வழங்கும்படி உத்தரவிட்டார். சிறை தண்டனையை ஒரு மாதம் நிறுத்தி வைத்தார்.