கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க கே.எஸ்.சி.ஏ., தயார்
கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்ற வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க கே.எஸ்.சி.ஏ., தயார்
ADDED : ஏப் 21, 2026 02:44 AM
பெங்களூரு: கள்ளச்சந்தையில் ஐ.பி.எல்., டிக்கெட் விற்பனை செய்த வழக்கில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாக கே.எஸ்.சி.ஏ., அறிவித்து உள்ளது.
ஐ.பி.எல்., டிக்கெட்டை கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்ததாக, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உள்ள கேன்டீனில் வேலை செய்யும் சந்திரசேகர் என்பவரை, சி.சி.பி., போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இரண்டு பன்னாட்டு நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்டு, கள்ளச்சந்தையில் விற்பனை செய்வது தெரிந்தது. இதனால் இரண்டு நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மீது சி.சி.பி., போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஆர்.சி.பி., எனும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விளம்பர பார்ட்னரான டி.என்.ஏ., நிறுவனத்தில் பணி செய்யும் சிலர், கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் அசோசியேஷன் உறுப்பினர்கள் சிலருக்கும் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதுகுறித்து கே.எஸ்.சி.ஏ., செய்தி தொடர்பாளர் வினய் மிருத்யுஞ்சயா வெளியிட்ட அறிக்கை:
பெரு நிறுவனங்கள் பெயரில் வாங்கப்பட்ட, ஐ.பி.எல்., டிக்கெட்டுகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டது பற்றி, எங்கள் கவனத்திற்கு வந்து உள்ளது. ரசிகர்களுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ டிக்கெட் விற்பனை செய்வது எங்கள் வேலை இல்லை. டிக்கெட் விற்பனையை அணிகளின் உரிமையாளர்களும், அவர்களால் நியமிக்கப்பட்டவர்களும் கையாளுகின்றனர். எங்களுக்கே குறைந்த டிக்கெட்டுகள் தான் கிடைக்கின்றன.
எங்களுக்கு வரும் டிக்கெட்டுகளை கிரிக்கெட் கிளப்புகள், எங்களுக்கு சேவைகளை வழங்கும் அரசு நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்கிறோம்.
கள்ளச்சந்தையில் டிக்கெ ட் விற்றதில் எங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை. இதில் ஈடுபட்டு உள்ள நபர்கள் எங்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் இல்லை. சி.சி.பி., போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவோம். சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்களும் கோரிக்கை வைக்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
