தபால் மூலமாக மாம்பழம் விற்பது நிறுத்தம் பணமில்லை என்கிறது கே.எஸ்.எம்.டி.எம்.சி.,
தபால் மூலமாக மாம்பழம் விற்பது நிறுத்தம் பணமில்லை என்கிறது கே.எஸ்.எம்.டி.எம்.சி.,
ADDED : மே 04, 2026 10:52 PM

பெங்களூரு: தபால் ஊழியர்கள் மூலமாக, வீடு வீடாக மாம்பழம் கொண்டு சேர்க்கும் திட்டத்தை, கே.எஸ்.எம்.டி.எம்.சி., என்ற, கர்நாடக மாநில மாம்பழ மேம்பாடு மற்றும் மார்க்கெட் கார்ப்பரேஷன் நிறுத்தியுள்ளது.
கர்நாடகாவில் கொரோனா தீவிரமாக இருந்த போது, ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. மக்களால் வீட்டை விட்டு வெளியே வர முடியவில்லை. விவசாயிகளோ தாங்கள் விளைவித்த மாம்பழங்களை விற்க முடியாமல் பரிதவித்தனர்.
பொதுமக்களுக்கு உதவியாகவும், விவசாயிகளின் நலனுக்காகவும், தபால் மூலமாக மாம்பழங்களை வீட்டு வாசலுக்கு கொண்டு சேர்க்கும் திட்டத்தை, கே.எஸ்.எம்.டி.எம்.சி., செயல்படுத்தியது. இதற்காக தபால் துறையுடன் ஒப்பந்தம் செய்தது. பழங்களை கொண்டு சேர்க்க, தபால் துறைக்கு நிர்ணயித்த தொகை கட்டணமாக செலுத்தப்பட்டது.
ஆண்டு தோறும் நுாற்றுக்கணக்கான விவசாயிகள், இந்த திட்டத்தால் பயன் அடைந்தனர். விவசாயிகள் தங்களின் தோட்டத்தில் விளையும் மாம்பழ ரகம், விலை, மொபைல் எண் போன்ற விபரங்களை, தபால்துறை இணைய தளத்தில் பதிவு செய்வர்.
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான மாம்பழத்தை, ஆர்டர் செய்வர். ஆன்லைனில் பணம் செலுத்துவர்.
அதன்பின் சம்பந்தப்பட்ட விவசாயிகளுக்கு, மின்னஞ்சல் வழியாக தபால் துறை தகவல் அனுப்பும். விவசாயிகளும் மாம்பழங்களை பேக்கிங் செய்து, பெங்களூரின் தலைமை தபால் அலுவலகத்துக்கு அனுப்புவர்.
அங்கிருந்து தபால் ஊழியர் மூலமாக, வாடிக்கையாளரின் வீடுகளுக்கு மாம்பழம் கொண்டு சேர்க்கப்படும். இத்திட்டம் விவசாயிகளுக்கும், பொது மக்களுக்கும் மிகவும் உதவியாக இருந்தது.
இப்போது நிதி பற்றாக்குறையை காரணம் காட்டி, தபால் மூலமாக மாம்பழம் அனுப்பும் திட்டத்தை, கே.எஸ்.எம்.டி.எம்.சி., நிறுத்தியுள்ளது. இதனால், விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
கே.எஸ்.எம்.டி.எம்.சி., நிர்வாக இயக்குனர் வேதமூர்த்தி கூறியதாவது:
மாம்பழங்களை விற்க, தபால் துறை மற்றும் கே.எஸ்.எம்.டி.எம்.சி., ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தன.
இதற்கான சாப்ட்வேர் மேம்படுத்துவது உட்பட, மற்ற பணிகளுக்காக, தபால் துறைக்கு ஐந்து லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருந்தது. தற்போதைக்கு கே.எஸ்.எம்.டி.எம்.சி.,யிடம் பணம் இல்லாததால், தபால் மூலமாக மாம்பழம் விற்பதை நிறுத்தியுள்ளோம்.
அதற்கு மாற்றாக, லால்பாகில் மட்டுமே நடந்து வந்த மேளாவை, ஐ.டி., நிறுவனங்கள், மெட்ரோ ரயில் நிலையங்கள், முக்கியமான மைதானங்கள் உட்பட, பல இடங்களுக்கு விஸ்தரிக்க திட்டமிட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
