நீர்வீழ்ச்சிகளை காண கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கம்
நீர்வீழ்ச்சிகளை காண கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு பஸ் இயக்கம்
ADDED : ஜூலை 15, 2026 11:42 PM

- நமது நிருபர் -
வார இறுதி நாட்களில், குடும்பத்துடன், நண்பர்களுடன் எங்காவது சுற்றுலா செல்ல விரும்புகிறீர்களா... உங்களுக்காக கே.எஸ்.ஆர்.டி.சி., சிறப்பு சலுகை அறிவித்துள்ளது.
மழைக்காலத்தில் நர்த்தனமாடும் நீர்வீழ்ச்சிகளை காண்பதும், இயற்கையை ரசிப்பதும் மனதுக்கும், உடலுக்கும் புத்துணர்ச்சியை அளிக்கும். நீர்வீழ்ச்சியின் அழகை காண, சுற்றுலா பயணியர் அலை பாய வேண்டிய அவசியம் இல்லை. இயற்கையின் மடியில் பொழுது போக்க விரும்புவோருக்காக, நீர்வீழ்ச்சி சிறப்பு சுற்றுலா திட்டத்தை, கே.எஸ்.ஆர்.டி.சி., அறிவித்துள்ளது.
இது குறித்து, கே.எஸ்.ஆர்.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
மழைக்காலத்தில் நீர்வீழ்ச்சிகளை ரசிக்க, சுற்றுலா பயணியரின் வசதிக்காக, பெலகாவியில் இருந்து பிரசித்தி பெற்ற ஹிடகல் அணை, கோடசினமல்கி மற்றும் கோகாக் நீர்வீழ்ச்சிகளுக்கு, சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கடந்த 11ம் தேதியன்று, சிறப்பு பஸ்கள் போக்குவரத்தை துவங்கியுள்ளன. வெறும், 230 ரூபாய் செலவில் மூன்று இடங்களையும் ரசிக்கலாம். இது சுற்றுலா பயணியருக்கு, பொன்னான வாய்ப்பாகும்.
சுற்றுலா பயணியர் அதிக பொருளாதார சுமை இல்லாமல், பாதுகாப்பாகவும், சுகமாகவும் சுற்றுலா செல்லலாம். வரும் ஆகஸ்ட் 30 வரை, இந்த சலுகை இருக்கும். மாதந்தோறும் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமை, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள், விடுமுறை நாட்களில் சிறப்பு பஸ்கள், நீர்வீழ்ச்சிகளுக்கு செல்லும்.
காலை 9:00 மணிக்கு, பெலகாவி மத்திய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் பஸ், நீர்வீழ்ச்சிகளை சுற்றிவிட்டு மாலை 6:00 மணிக்கு, அதே இடத்துக்கு திரு ம்பும். சுற்றுலா பயணியர் பாதுகாப்பான வேகதுாத் பஸ்சில் அழைத்து செல்லப்படுவர்.
ஒவ்வொரு நீர்வீழ்ச்சிகளிலும், சுற்றுலா பயணியர் போட்டோ எடுக்கவும், இயற்கையை ரசிக்கவும் தேவையான நேரம் அளிக்கப்படும். நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல விரும்புவோர், பெலகாவி மத்திய பஸ் நிலையத்துக்கு வந்து, இருக்கைகள் முன் பதிவு செய்து கொள்ளலாம். இது ஒரு நாள் சுற்றுலா திட்டமாகும். நீர்வீழ்ச்சிக்கு செல்லும் சிறப்பு பஸ்சில், பெண்கள் டிக்கெட் வாங்கியே பயணிக்க வேண்டும். இந்த சலுகை, 'சக்தி' திட்டத்துக்கு பொருந்தாது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
