ஒரு நாள் சுற்றுலா திட்டம் கே.எஸ்.டி.டி.சி., அறிவிப்பு
ஒரு நாள் சுற்றுலா திட்டம் கே.எஸ்.டி.டி.சி., அறிவிப்பு
ADDED : ஏப் 30, 2026 12:16 AM

பெங்களூரு: கே.எஸ்.டி.டி.சி., எனும் கர்நாடக சுற்றுலா மேம்பாட்டு கார்ப்பரேஷன், சுற்றுலா பயணியரின் வசதிக்காக, யஷ்வந்த்பூரில் இருந்து பன்னரகட்டா - முத்தியாலமடுவு இடையே, ஒரு நாள் சுற்றுலா திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
இது குறித்து, கே.எஸ்.டி.டி.சி., வெளியிட்ட அறிக்கை:
கோடைக்காலம் என்பதால், பெங்களூரில் வசிக்கும் மக்கள் சுற்றுலா செல்ல திட்டமிடுவர். இவர்களின் வசதிக்காக ஏ.சி., பஸ்சில் ஒருநாள் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். இதற்காக கே.எஸ்.ஆர்.டி.சி., குளிர்சாதன பஸ் இயக்குகிறது. செவ்வாய் தவிர, வாரத்தில் ஆறு நாட்களும் இந்த சேவை இருக்கும். இதை சுற்றுலா பயணியர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு நாள் சுற்றுலாவில், பன்னரகட்டா மிருகக்காட்சி சாலை, சபாரி, பட்டாம்பூச்சு பூங்கா, முத்தியாலமடுவு நீர் வீழ்ச்சியை ரசிக்கலாம். படகு சவாரியுடன், சூரிய அஸ்மனத்தையும் காணலாம். ஒரு பயணிக்கு தலா 1,680 ரூபாய் கட்டணம். இதில் பன்னரகட்டா மிருகக்காட்சி சாலை சபாரி சேவை, பட்டாம்பூச்சு பூங்கா கட்டணம், முத்தியாலமடுவில் படகு சவாரி கட்டணம், காலை சிற்றுண்டி, மதிய உணவு, மாலை சிற்றுண்டி கட்டணமும் அடங்கும்.
யஷ்வந்த்பூரில் இருந்து, காலை 7:15 மணிக்கு சுற்றுலா ஆரம்பமாகும். மெஜஸ்டிக், சாந்திநகர், ஜெயநகர் பஸ் நிலையத்திலும், 'பிக்கப்' வசதி இருக்கும். கே.எஸ்.டி.டி.சி., சார்பில் சுற்றுலா அழைத்து செல்வதால், பன்னரகட்டா பூங்காவின் அனைத்து நுழைவாசல்களிலும் தடையின்றி நேரடியாக நுழைய, உதவியாக இருக்கும்.
இந்த சலுகையை பெற விரும்பும் சுற்றுலா பயணியர், கே.எஸ்.டி.டி.சி.,யின் யஷ்வந்த்பூர் புக்கிங் கவுன்டர், எங்களின் அதிகாரப்பூர்வ ஏஜன்டுகள், இணையதளங்களில் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். கூடுதல் தகவல் வேண்டுவோர் 080 - 4334 4334/ 35, 89706 50070, 89706 50075, 89706 50021 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். அல்லது https://Kstdc.co என்ற இணைய தளத்திலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
