/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புலிகளை விஷம் வைத்து கொன்ற 'குட்டி வீரப்பன்' கைது
/
புலிகளை விஷம் வைத்து கொன்ற 'குட்டி வீரப்பன்' கைது
புலிகளை விஷம் வைத்து கொன்ற 'குட்டி வீரப்பன்' கைது
புலிகளை விஷம் வைத்து கொன்ற 'குட்டி வீரப்பன்' கைது
ADDED : ஜன 09, 2026 06:32 AM

சாம்ராஜ்நகர்: கடந்த பல மாதங்களாக, வனத்துறை அதிகாரிகளின் துாக்கத்தை கெடுத்த 'குட்டி வீரப்பன்' மைசூரு ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கடந்த, 2025 அக்டோபர் 3ல், சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனுாரின் பச்சதொட்டி கிராமம் அருகே, புலியின் தலை, கை, கால்கள் கிடந்தன. இதைக்கண்ட கிராமத்தினர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். சுற்றுப்பகுதியில் தேடிய போது புலியின் உடலை கண்டுபிடித்தனர்.
புலிக்கு விஷம் வைத்து கொன்றதுடன், உடலை மூன்று துண்டாக வெட்டியது தடயவியல் ஆய்வக அறிக்கையில் தெரிய வந்தது. அதன்பின் விசாரணையை தீவிரப்படுத்திய அதிகாரிகள் சிலரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்ததில், புலியை கொன்ற வழக்கில், 'குட்டி வீரப்பன்' என, அழைக்கப்படும் கோவிந்தா, 30,வுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
தலைமறைவாக இருந்த அவரை, வனத்துறை அதிகாரிகள் தேடி வந்தனர்.
இந்நிலையில், வழக்கு ஒன்றின் விசாரணைக்காக, நேற்று காலை அவர் மைசூரு நீதிமன்றத்துக்கு வருவது தெரிய வந்தது. வனத்துறையின், 30 அதிகாரிகள், மைசூரு நீதிமன்ற வளாகத்தில் காத்திருந்தனர்.
ஆனால், அவர்களிடம் சிக்காமல் கோவிந்தா, மைசூரு நகர ரயில் நிலையத்துக்கு தப்பினார். ரயிலில் ஏறி தப்ப முயற்சித்த அவரை, அதிகாரிகள் சுற்றி வளைத்து பிடித்தனர்.
சந்தன கடத்தல் வீரப்பன் இறந்து, பல ஆண்டுகள் ஆகின்றன. அவரை போன்றே வன விலங்குகளை, கோவிந்தா கொடூரமாக வேட்டையாடியதால் இவர், 'குட்டி வீரப்பன்' என, அழைக்கப்பட்டார். புலிகள், சிறுத்தைகளை கார்போபியூரான் என்ற விஷத்தை பயன்படுத்தி கொன்றுள்ளார். உடல்களை மூன்று துண்டாக வெட்டி வீசியுள்ளார். வனத்துறை அதிகாரிகளுக்கு தலைவலியாக இருந்த குட்டி வீரப்பன் இப்போது சிக்கினார். அவரிடம் தீவிர விசாரணை நடக்கிறது.

