ADDED : ஏப் 03, 2025 07:22 AM

புதுடில்லி : ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவரும், பீஹார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், 76, திடீர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற லாலு பிரசாத், தற்போது ஜாமினில் வெளியே உள்ளார். இந்நிலையில் டில்லிக்கு செல்ல, பீஹாரின் பாட்னா விமான நிலையத்திற்கு நேற்று மாலை சென்றார். அப்போது, எதிர்பாராதவிதமாக லாலு பிரசாத்திற்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து, பாட்னாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் பரிசோதித்ததில், லாலு பிரசாத்தின் உடலில் ரத்த அழுத்தம் குறைந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது.
ஏற்கனவே, இதயம் மற்றும் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டுள்ள நிலையில், லாலு பிரசாத் யாதவிற்கு ரத்த அழுத்தம் குறைந்ததால், ஏர் ஆம்புலன்ஸ் வாயிலாக டில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அனுமதிக்கப்பட்டு உள்ளார்.