ADDED : ஜன 25, 2026 05:18 AM
கெங்கேரி: தன்னிடம் வேலை பார்த்த பெண் ஊழியர், அனுமதி இல்லாமல் விடுமுறை எடுத்ததால், அவரை ஆபாசமாக திட்டிய சைபர் சென்டர் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
பெங்களூரு கெங்கேரியில் சையது என்பவர் 'மஸ்கன் டைம்ஸ் சைபர் சென்டர்' நடத்தி வருகிறார். இங்கு லட்சுமி என்பவர், ஐந்து ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். இவர் விடுமுறை எடுத்திருந்தார். ஆனால், சொன்ன தேதிக்கு பணிக்கு வரவில்லை. கடந்த 22ம் தேதி, தான் பணியாற்றும் சென்டர் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார். இதை பார்த்த, சென்டர் உரிமையாளர், அவரை நிறுத்தினார்.
'உன் இஷ்டம் போல் விடுமுறை எடுத்து கொள்கிறாயா. உன் ஆடைகளை அவிழ்த்து, அடித்து, சாலையில் வீசிவிடுவேன். என் பணத்தை வாங்கிக் கொண்டு என்னிடம் விளையாடாதே' என கத்தினார்.
இதை பார்த்த அங்கிருந்த சிலர், சையத்தை திட்டி, பொது இடத்தில் பெண்ணை தரக்குறைவாக பேசாதே என எச்சரித்தனர். இந்த தகவல் அறிந்த கெங்கேரி போலீசார், அங்கு வந்து சையத்தை கைது செய்து அழைத்து சென்றனர். பெண்ணை மிரட்டி, திட்டியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். அதன் பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
