/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது'
/
'மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளது'
ADDED : மே 03, 2025 11:09 PM

கொப்பால்: “மாநிலத்தில் பாதுகாப்பின்மை ஏற்பட்டுள்ளது. சட்டம் மற்றும் நீதியின் மீது, மக்கள் நம்பிக்கையை இழந்துள்ளனர். பரஸ்பரம் அடித்துக் கொள்கின்றனர்,” என, உடுப்பி பெஜாவர் மடத்தின் விஸ்வ பிரசன்ன தீர்த்த சுவாமிகள் வருத்தம் தெரிவித்தார்.
கொப்பாலில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மங்களூரில் ஹிந்து அமைப்பின் தொண்டர் கொலை செய்யப்பட்டுள்ளார். இது பாதுகாப்பின்மையை உணர்த்துகிறது. மாநில அரசு கடுமையான நடவடிக்கை எடுத்தால், இத்தகைய குற்றங்கள் நடக்காது.
ஏதாவது ஒரு இடத்தில், கொலை நடக்கிறது. இதற்கு பழிக்கு பழி வாங்க, மற்றொரு கொலை நடக்கிறது. இது போன்று ஒன்றல்ல, மாநிலத்தில் தினமும் நடக்கிறது. மக்களுக்கு பாதுகாப்பு இல்லை.
உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டார். சிறார்கள் பலாத்காரத்துக்கு ஆளாகின்றனர். அரசு மற்றும் சட்டத்தின் மீது, மக்கள் நம்பிக்கையை இழந்தால், இத்தகைய சம்பவங்கள் நடக்கின்றன.
சட்டத்தை கையில் எடுத்துக் கொள்வோர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதை கட்டுப்படுத்த, அரசும், நீதித்துறையும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஷ்மீரின் பஹல்காமில் நடந்த சம்பவத்துக்கு காரணமானவர்களை தண்டிப்பது கட்டாயம். தவறு செய்தவர்கள் எவ்வளவு பெரியவர்களாக இருந்தாலும், தண்டித்தே ஆக வேண்டும். இதுகுறித்து மத்திய அரசு மற்றும் ராணுவம் எடுக்கும் முடிவுக்கு, அனைவரும் ஆதரவளிக்க வேண்டும்.மத்திய அரசு மற்றும் ராணுவத்தின் மனோதிடம் குறையும் வகையில், யாரும் பேசக்கூடாது. அப்படி பேசினால், நம் தலையில் நாமே கல்லை போட்டுக் கொண்டதற்கு சமம்.
யுத்தம் நடத்துவதா, வேண்டாமா என்பதை, நாம் முடிவு செய்யக்கூடாது. இதை மத்திய அரசு மற்றும் ராணுவத்திடம் விட்டு விட வேண்டும். வரும் நாட்களில் இது போன்ற சம்பவங்கள் நடக்காமல், நாட்டின் சமத்துவத்துக்கு பங்கம் வராமல், மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

