/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எல்.இ.டி., தெருவிளக்குகள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
/
எல்.இ.டி., தெருவிளக்குகள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
எல்.இ.டி., தெருவிளக்குகள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
எல்.இ.டி., தெருவிளக்குகள் பெங்களூரு மாநகராட்சி திட்டம்
ADDED : மே 16, 2025 10:14 PM
பெங்களூரு: பெங்களூரில் சோடியம் தெரு விளக்குகளுக்கு பதிலாக, எல்.இ.டி., பல்புகள் பொருத்தப்படுகின்றன.
இதுதொடர்பாக, பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
பெங்களூரில் 5.37 லட்சத்துக்கும் மேற்பட்ட தெரு விளக்குகள் உள்ளன. இவற்றை நிர்வகிக்க ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் செலவிடப்படுகிறது. பெஸ்காமுக்கு 330 கோடி ரூபாய் மின் கட்டணம் செலுத்துகிறது. மின் கட்டணம் உயர்த்தப்பட்டதால், செலவு மேலும் அதிகரிக்கும்.
மின் கட்டணத்தை மிச்சப்படுத்த, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. தெருக்களில் சோடியம் பல்புகளை மாற்றிவிட்டு, எல்.இ.டி., பல்புகள் பொருத்த முடிவு செய்துள்ளது.
தெருவிளக்குகளுக்கு எல்.இ.டி., பல்புகள் பொருத்தும் திட்டம் 2018ல் வகுக்கப்பட்டது. அப்போது டெண்டர் எடுத்த நிறுவனம் பணிகளை துவக்கவே இல்லை. அதனால் டெண்டர் ரத்து செய்யப்பட்டது.
ஆறு ஆண்டுகளுக்கு பின், திட்டத்தை மீண்டும் கையில் எடுத்துள்ளோம். டெண்டர் அழைத்து பணிகளை ஒப்படைத்துள்ளோம். எல்.இ.டி., தெரு விளக்குகள் பொருத்தும் நிறுவனங்களே, ஏழு ஆண்டுகள் வரை விளக்குகளை பராமரிக்க வேண்டும்.
இந்த நிறுவனங்களுக்கு மாதந்தோறும் தவணை முறையில், மாநகராட்சி பணம் செலுத்தும். ஏழு ஆண்டுகளுக்கு 700 கோடி ரூபாய் செலவாகும்.
தெரு விளக்குகளுடன், மின் கம்பங்களில் கண்காணிப்பு கேமராக்கள், மாசுவை அளவிடும் சாதனம் பொருத்தப்படும். எல்.இ.டி., பல்புகள் பொருத்துவதால், 85.50 சதவீதம் மின்சாரம் பயன்பாடு குறையும்.
மாநகராட்சிக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான ரூபாய் மிச்சமாகும். மிச்சமாகும் தொகையிலேயே மின் கட்டணம் செலுத்த, ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங்க செலவிடப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.