கிராமவாசிகள் இருவரை தாக்கிய சிறுத்தை பசியால் உயிரிழப்பு
கிராமவாசிகள் இருவரை தாக்கிய சிறுத்தை பசியால் உயிரிழப்பு
ADDED : மார் 25, 2026 07:15 AM

ஷிவமொக்கா: ஷிவமொக்காவில் இரு வாலிபர்களை தாக்கிய பெண் சிறுத்தை, பசியால் உயிரிழந்துள்ளது.
ஷிவமொக்கா மாவட்டம், ஷிகாரிபுரா தாலுகா தடகனஹள்ளி கிராமத்தை சேர்ந்த மிருதுஞ்செயா என்பவரை காலையிலும், அடகன்டி கிராமத்தை சேர்ந்த சு தீப் என்பவரை மாலையிலும், கடந்த, 21ம் தேதி சிறுத்தை ஒன்று தாக்கி விட்டு தப்பியது. படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், தடகனஹள்ளி கிராமத்தில், விவசாயி ஒருவரின் தோட்டத்தில் பெண் சிறுத்தை ஒன்று இறந்து கிடந்தது. இதுதொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதுபற்றி ஷிரகொப்பா வனத்துறை அதிகாரி ஜாவேத் பாஷா கூறியதாவது:
விவசாயி தோட்டத்தில் இறந்து கிடந்த சிறுத்தை குறித்து எங்களுக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்று பார்த்த போது, அதன் உடலில் எந்த காயங்களும் இல்லை.
எனவே, அங்கேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பரிசோதனையின் போது, சிறுத்தையின் வயிற்றில் எதுவும் இல்லை. எனவே, அது பசியால் இறந்திருக்கலாம்.
இப்பகுதியில் சிறுத்தைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அவை மனிதர்களை தாக்குவது மிகவும் அரிது. இறந்த சிறுத்தை கடந்த நான்கு அல்லது ஐந்து நாட்களாக இங்கு சுற்றித்திரிந்து கொண்டிருக்கிறது.
பொதுவாக, அவை மனிதர்களை பார்த்தவுடன் ஓடிவிடும். ஆனால், இதுவோ கார் அல்லது பைக் சத்தத்தை கேட்டு ஓடவில்லை. ஒருவேளை நோயால் பாதிக்கப்பட்டு, சாப்பிடாமல் இருந்திருக்கலாம். ஆனாலும், இறுதி அறிக்கை வந்த பின்னரே சரியா ன காரணம் தெரியவரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
