ADDED : ஜூலை 26, 2026 11:52 PM

பெங்களூரு: பெங்களூரின் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில், சிறுத்தை நடமாடுவதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தையை பிடிக்கும்படி, அப்பகுதியினர் வனத்துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுவரை கிராமங்களில் நடமாடி, மக்களை அச்சுறுத்திய சிறுத்தைகள், சமீப காலமாக நகர் பகுதிகளில் நுழைந் துள்ளன. பெங்களூரில் சிறுத்தை பீதி, நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. பொம்மனஹள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி உட்பட, பல இ டங்களில் சிறுத்தைகள் தென்படுகின்றன.
பனசங்கரி ஆறாவது ஸ்டேஜின், இரண்டாவது லே - அவுட்டில், நேற்று முன் தினம் இரவு, சிறுத்தை தென்பட்டதால் அப்பகுதியினர் பீதி அடைந்துள்ளனர். மக்கள் நெரிசல் மிகுந்த இடத்திலேயே, சிறுத்தை நடமாடியதால், அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர். வெளியே வரவே அச்சமடைந்துள்ளனர்.
சுதந்திரமாக சிறுத்தைகள் நடமாடுவதை, பலரும் தங்களின் மொபைல் போனில் பதிவு செய்தனர். இது குறித்து, அப்பகுதியினர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு வந்த வனத்துறை ஊழியர்கள், சிறுத்தையை மக்கள் நடமாட்டம் உள்ள இடத்தில் இருந்து விரட்ட, பட்டாசு வெடித்தனர். அந்த பகுதியில், ஒரு சில இடங்களில் கூண்டுகளை வைத்துள்ளனர்.
'சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் தனியாக நடமாட வேண்டாம். இரவில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம். சிறார்களை வெளியே விளையாட விட வேண்டாம். வளர்ப்பு பிராணிகளை கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்' என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
பனசங்கரி ஆறாவது ஸ்டேஜ்மற்றும் ராஜராஜேஸ்வரி நகரின் சுற்றுப்பகுதிகள், வனத்தை ஒட்டி அமைந்துள்ளன. இந்த லே - அவுட்களில், அவ்வப்போது சிறுத்தைகள் தென்பட்டு, மக்களை அச்சுறுத்துகின்றன.
இப்பகுதிகளில் இரவு நேரத்தில் நடமாடுவதை தவிர்க்கும்படி, வனத்துறையும் அறிவுறுத்தியுள்ளது.
