தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு மைசூரு வீராங்கனை ஷில்பா தேர்வு

 காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு மைசூரு வீராங்கனை ஷில்பா தேர்வு

 காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு மைசூரு வீராங்கனை ஷில்பா தேர்வு


ADDED : ஜூலை 26, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 26, 2026 11:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

- நமது நிருபர் -:

சிறு வயதில் விபத்தில் காலை இழந்தபோதும், மன உறுதியுடன் போராடி, காமன்வெல்த் போட்டிக்கு தேர்வாகி, மாநிலத்துக்கு பெருமை சேர்த்துள்ளார், மைசூரை சேர்ந்த ஷில்பா.

மைசூரு மாவட்டம் கே.ஆர்., நகர் தாலுகாவின் கன்சுகரனகொப்பால் கிராமத்தின் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் ஷில்பா, 35. சிறுவயதில் ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, லாரி ஒன்று அவர் மீது மோதி, இடது காலில் ஏறியது. இதில், இடது காலை இழந்தார்.

விளையாட்டு துறையில் அதிகம் விருப்பம் இல்லை என்றாலும், பி.எட்., முதுகலை பட்டம் முடித்துள்ள அவர், மைசூரில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். தினமும் பஸ்சில் பயணிக்கும் போது, அவரது தோழி கீதா, மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு போட்டியில் பங்கேற்கும்படி ஷில்பாவை வற்புறுத்தி வந்தார்.

ஆரம்பத்தில், வேண்டாம் என்று கூறிய ஷில்பா, தோழியின் தொடர் முயற்சியில், 2019ல் விளையாட்டில் தன் ஆர்வத்தை காண்பித்தார். அப்போது அவரின் வயது, 29.

துவக்கத்தில் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி கைப்பந்து விளையாட்டு விளையாட முடிவு செய்தார். இவ்விளையாட்டில், கர்நாடக அணியை, தன் தலைமையில் நான்கு முறை வழிநடத்தினார்.

இவரின் திறமையை உணர்ந்த, கைப்பந்து பயிற்சியாளர் ராகவேந்திரா, ஷில்பாவை தனி நபர் போட்டியில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தினார்.

அதன்படி, 2023ல் குண்டு எறிதல், வட்டு எறிதலில் தன் பயிற்சியை துவக்கினார். முதலில், அவராகவே இதில் பயிற்சியை துவக்கினார். பின், பெங்களூரில் உள்ள, ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் பயிற்சியாளர் எஸ்.டி.இஷானிடம் பயிற்சி பெற்றார்.

சர்வதேச தகுதி சுற்றில் பங்கேற்க, சத்யநாராயணா உதவினார். இதன் மூலம், தாய்லாந்தில் 2023ல் நடந்த சர்வதேச போட்டியில், வட்டு எறிதலில் வெள்ளி பதக்கமும், ஈட்டி எறிதலில் வெண்கலம் பதக்கமும் வென்று, தனது முதல் சர்வதேச வெற்றியை பதிவு செய்தார்.

அதன் பின், 2024ல் கோவாவில் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் குண்டு எறிதலில் பதக்கம் வென்றார். 2025ல் டில்லியில் நடந்த உலக பாரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டியில் குண்டு எறிதலில் தங்கம் வென்று சாதித்தார்.

இச்சாதனைக்கு பின், தனது ஆசிரியை பணியை ராஜினாமா செய்த அவர், விளையாட்டை தனது முழு நேர தொழிலாக தேர்ந்தெடுத்தார். சர்வதேச அளவில் போட்டியிட்ட போதிலும், ஷில்பாவுக்கு நிதி பிரச்னை, பெரும் சவாலாக உள்ளது.

அவருக்கு எந்தவொரு பெருநிறுவனம் அல்லது நிறுவன நிதியுதவியும் இல்லாததால், அதிநவீன விளையாட்டு செயற்கை காலுக்கு பதிலாக, சாதாரண ஜெய்ப்பூர் செயற்கை பாதத்தை பயன்படுத்தியே பயிற்சி மற்றும் போட்டியில் பங்கேற்கிறார்.

அவர் கூறியதாவது:

விபத்துக்கு பின், எங்கள் குடும்பத்தினர் அதிர்ச்சியில் இருந்தனர். ஆனாலும், என் பெற்றோர், எனக்கு பக்கபலமாக இருந்தனர். என் காலை இழந்தபோதும், அவர்கள் என்னை வித்தியாசமாக பார்த்ததில்லை. அத்துடன் நம்பிக்கையுடன் முயற்சி செய்யும்படி ஊக்குவித்தனர்.

இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்துவது எனக்கு பெருமைக்குரிய விஷயம். காமன்வெல்த் விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில், தங்கம் வெல்வதே எனது தற்போதைய இலக்காக உள்ளது. பெருநிறுவனங்கள், பாராலிம்பிக் போட்டிகளை ஆதரிக்க வேண்டும். பல விளையாட்டு வீரர்கள் பயிற்சி, போட்டிகளுக்கான செலவுகளை சமாளிக்க சிரமப்படுகின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us