/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
:சாலையில் குப்பை வீசியோருக்கு ஜி.பி.ஏ., அதிகாரிகள்... பாடம்!: வீட்டு முன் எடுத்து கொட்டி அபராதமும் விதிப்பு
/
:சாலையில் குப்பை வீசியோருக்கு ஜி.பி.ஏ., அதிகாரிகள்... பாடம்!: வீட்டு முன் எடுத்து கொட்டி அபராதமும் விதிப்பு
:சாலையில் குப்பை வீசியோருக்கு ஜி.பி.ஏ., அதிகாரிகள்... பாடம்!: வீட்டு முன் எடுத்து கொட்டி அபராதமும் விதிப்பு
:சாலையில் குப்பை வீசியோருக்கு ஜி.பி.ஏ., அதிகாரிகள்... பாடம்!: வீட்டு முன் எடுத்து கொட்டி அபராதமும் விதிப்பு
ADDED : அக் 30, 2025 11:13 PM

பெங்களூரில் குப்பை, தீர்வு காண முடியாத பிரச்னையாக உள்ளது. இதற்கு பொது மக்களும் காரணமாக உள்ளனர். குப்பை சேகரிக்க தினமும் வீட்டு வாசலுக்கே, வாகனங்கள் வருகின்றன. ஆனால் பலரும் வாகனங்களில் குப்பை போடுவது இல்லை.
மாறாக பிளாஸ்டிக் கவர்களில் நிரப்பி, சாலை ஓரங்கள், காலி வீட்டுமனைகள், விளையாட்டு மைதானங்கள், கால்வாய்கள் உள்ளிட்ட பொது இடங்களில் வீசுகின்றனர்.
பிளாக் ஸ்பாட் இதன் விளைவாக, 'பிளாக் ஸ்பாட்'டுகள் அதிகரிக்கின்றன. நகரின் அழகு பாழாவதுடன், சுற்றுச்சூழலும் அசுத்தமாகிறது. பொது இடங்களில் குப்பை கொட்ட வேண்டாம் என, ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையம் அதிகாரிகள் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் பயன் இல்லை.
இதற்கு முன்பு, பிளாக் ஸ்பாட்டுகளை சுத்தம் செய்து, அந்த இடத்தில் துாய்மை பணியாளர்கள் மூலமாக கோலம் போட்டு அழகாக்கி, நடவடிக்கை எடுத்தது.
சில நாட்கள் மட்டுமே அந்த இடத்தில், பொது மக்கள் குப்பை கொட்டாமல் இருந்தனர். அதன்பின் பழையபடி குப்பையை கொட்டுகின்றனர்.
பொது இடங்களில் குப்பை கொட்டுவோருக்கு, பாடம் புகட்ட ஜி.பி.ஏ., அதிகாரிகள் முன் வந்துள்ளனர். எந்த வீட்டினர் பொது இடங்களில் குப்பை போடுகின்றனரோ, அந்த வீட்டின் முன் அனைத்து குப்பையை கொட்டுவதுடன், அபராதமும் வசூலிக்க முடிவு எடுத்தனர்.
இதன்படி, பெங்களூரின் பல்வேறு இடங்களில், வீடுகளின் முன் நேற்று குப்பையை போட்டு, அதிகாரிகள் பாடம் புகட்டினர். சில வீடுகளில், 'நாங்கள் குப்பையை போடவில்லை' என, ஊழியர்களுடன் வாக்குவாதம் செய்தனர்.
இதுகுறித்து, பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., நிர்வாக இயக்குநர் கரிகவுடா கூறியதாவது:
அவரவர் வீடுகளின் குப்பை, கழிவுகளை குப்பை கூடையில் போட்டு வைத்து, தினமும் காலை வீட்டு வாசலுக்கு வரும் வாகனங்களில் போட வேண்டும். அப்படி செய்யாமல் கண்ட, கண்ட இடங்களில் போட்டு, அசுத்தமாக்குகின்றனர்.
குப்பை பிரச்னை குறித்து, பெங்களூரு நகர மேம்பாட்டு அமைச்சரும், துணை முதல்வருமான சிவகுமார் தலைமையில், ஆலோசனை நடந்தது. அப்போது அவர் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, உத்தரவிட்டார்.
வீடியோ பதிவு அதன்படி நடவடிக்கை எடுத்துள்ளோம். ஜி.பி.ஏ., கட்டுப்பாட்டில் இயங்கும் பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., எனும் பெங்களூரு திடக்கழிவு நிர்வகிப்பு லிமிடெட், 190 வார்டுகளில் 'குப்பை கொட்டும் உற்சவம்' என்ற பெயரில் திட்டத்தை துவக்கியுள்ளது.
நாங்கள் நியமித்துள்ள மார்ஷல்கள், பொது இடங்களில் குப்பை கொட்டுவோரை, வீடியோவை பதிவு செய்துள்ளனர். அவர்களின் வீடுகள் மற்றும் போன் எண்ணை, டிராக் செய்துள்ளனர். இந்த போட்டோக்கள், வீடியோக்கள் குப்பை கொட்டுவோருக்கு எதிரான சாட்சியாகும்.
இதன் அடிப்படையில் பி.எஸ்.டபிள்யூ.எம்.எல்., ஊழியர்கள், ஆட்டோவில் குப்பையை கொண்டு சென்று வீட்டு வாசலில் கொட்டுகின்றனர். நேற்று பொது இடங்களில் குப்பை போட்ட, 218 வீடுகளை அடையாளம் கண்டு, அந்தந்த வீடுகளின் முன் குப்பை கொட்டப்பட்டது.
பொது இடங்களில் குப்பை கொட்டக்கூடாது என, எச்சரித்து அபராதம் விதிக்கப்பட்டது. 218 வீடுகளில் 2.80 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது. இனி யார், பொது இடங்களில் குப்பை கொட்டினாலும் இதே தண்டனை கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.

