ADDED : மே 28, 2026 03:11 AM

- நமது நிருபர் -
கர்நாடகா மைசூரு மாகாணமாக இருந்த போது, 1399 முதல், 1950 வரை ஹைதர் அலி, திப்பு சுல்தான், மைசூரு உடையார் வம்சத்தினர் இந்த பகுதியை ஆட்சி செய்தனர். ஹைதர் அலி, திப்பு சுல்தான் காலத்தில் கட்டப்பட்ட கோட்டைகள், இன்னும் கம்பீரமாக உள்ளன. இவற்றில் ஒன்று தான் பேகூர் கோட்டை.
பெங்களூரு - ஓசூர் சாலையில் பேகூர் அக் ஷய் நகர் பகுதியில் இக்கோட்டை அமைந்து உள்ளது. பெங்களூரின் மிக பழமையானது என்று கூறப்படும் இந்த கோட்டை, 8 அல்லது 9ம் நுாற்றாண்டில் கட்டப்பட்டதாகவும் நம்பப்படுகிறது.
பெங்களூருக்கு அதன் பெயர் எப்படி வந்தது என்று கண்டறிய விரும்பினால் புத்தகத்திலோ, ஆவணங்களிலோ தேடினால் கிடைக்காது. ஆனால், பேகூர் கோட்டையில் உள்ள கல்வெட்டில், பெங்களூரு பெயர் எப்படி வந்தது என்பதற்கான வரலாறு பொறிக்கப்பட்டு உள்ளது.
இப்போதும் அங்கு சென்றால், பழங்கால கற்களால் கட்டப்பட்ட, கோட்டையின் நுழை வாயில் நம்மை வரவேற்கிறது. அங்கு உள்ள கல்வெட்டுகள் வரலாற்று சிறப்புகளை எடுத்து சொல்கிறது. கோட்டைக்குள் காசி விஸ்வநாதர், கிருஷ்ணருக்கு கோவில்கள் உள்ளன. மன்னர்கள் ஆட்சி காலத்தில் இருந்தே இங்கு சிறப்பு வழிபாடுகள் நடந்து வருகின்றன.
கோட்டைக்குள் காணப்படும் ஒரு கல்வெட்டில், நாகத்தராவின் மகள் தொண்டப்பே, இந்த கோட்டையிலேயே சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை மாய்த்து கொண்டதாகவும் வரலாறு உள்ளது.
கோட்டை பிரம்மிப்பாக இல்லாவிட்டாலும், அங்கு சென்றால் பழங்கால நினைவுகளை பார்த்த திருப்தி கிடைக்கும். கோட்டையின் அருகே பேகூர் ஏரியும் உள்ளது. ஏரிக்கரையில் நின்று புகைப்படம் எடுத்து நேரம் செலவழிக்கலாம்!
எப்படி
செல்வது
1 மெ ஜஸ்டிக்கில் இருந்து பேகூர் 16 கி.மீ., துாரம்.
2 மெஜஸ்டிக் - பேகூருக்கு 343 இ பி.எம்.டி.சி., பஸ் செல்கிறது.
3 கோட்டை முன் உள்ள பகுதியில் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம்.
