/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்'
/
கணவரை கொன்ற மனைவி கள்ளக்காதலனுக்கு 'ஆயுள்'
ADDED : ஜூலை 02, 2025 11:14 PM
துமகூரு: கள்ளக்காதலுக்காக கணவரை கொலை செய்த மனைவி உட்பட, இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, துமகூரு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
துமகூரு மாவட்டம், மதுகிரி தாலுகாவின், கொடிகேனஹள்ளி கிராமத்தில் வசித்தவர் அஞ்சினப்பா, 35.
இவரது மனைவி யசோதா, 32. இதே கிராமத்தில் வசிக்கும் மஞ்சுநாத், 28, என்பவருடன், யசோதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. அவ்வப்போது இருவரும் சந்தித்து, உல்லாசமாக இருந்தனர்.
இதையறிந்த அஞ்சினப்பா, கோபமடைந்து மனைவியை கண்டித்தார். அடித்து உதைத்தும் பார்த்தார். இதனால் கணவரை கொலை செய்ய, மஞ்சுநாத்துடன் சேர்ந்து யசோதா சதி திட்டம் தீட்டினார்.
கடந்த 2018 மே 12ம் தேதி இரவில், அஞ்சினப்பா சாப்பிட்டுவிட்டு, துாங்கினார். நள்ளிரவில் கள்ளக்காதலன் மஞ்சுநாத்தை, யசோதா வீட்டுக்கு வரவழைத்தார்.
அவருடன் சேர்ந்து கழுத்தை நெரித்து கணவரை கொலை செய்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு, கணவர் இறந்ததாக நாடகமாடினார்.
அக்கம், பக்கத்தினருக்கு அஞ்சினப்பாவின் இறப்பில் சந்தேகம் ஏற்பட்டது. இதுகுறித்து, மதுகிரி போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த போலீசார், விசாரணை நடத்தியபோது, கொலை செய்தது அம்பலமானது. வழக்குப் பதிவு செய்த மதுகிரி போலீசார், யசோதா, மஞ்சுநாத்தை கைது செய்தனர்.
விசாரணையை முடித்து, துமகூரின் மூன்றாவது கூடுதல் மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
விசாரணையில் இருவரின் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா 50,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.