பூட்டிய வீடுகளுக்கு வந்துள்ள 'லாக்ட் ஹவுஸ் பீட் சிஸ்டம்'
பூட்டிய வீடுகளுக்கு வந்துள்ள 'லாக்ட் ஹவுஸ் பீட் சிஸ்டம்'
ADDED : மே 11, 2026 02:37 AM
பங்கார்பேட்டை: பங்கார்பேட்டை தாலுகா முழுவதும் வீடுகள் மற்றும் முக்கிய இடங்களில் திருட்டு நடப்பதை கட்டுப்படுத்துவதற்காக, தங்கவயல் போலீஸ் மாவட்டத்தில், 'பூட்டப்பட்ட வீடு கண்காணிப்பு அமைப்பு' எனும், 'லாக்ட் ஹவுஸ் பீட் சிஸ்டம்' என்ற தொழில்நுட்பம் அமலுக்கு வந்துள்ளது.
பங்கார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிகுமார் கூறியதாவது:
பங்கார்பேட்டை நகரம் உட்பட தாலுகா முழுதும் உள்ள கிராம பகுதிகளில் வசிப்போர், வேலைகளுக்காகவோ அல்லது விடுமுறைக்காகவோ தங்கள் வீடுகளை பூட்டி விட்டு செல்லும் போது, சில இடங்களில் திருடர்கள், தங்கள் கைவரிசையை காண்பித்து வந்தனர்.
இதை முற்றிலும் தவிர்க்கும் வகையில், தங்கவயல் மாவட்ட போலீஸ் துறை, டிஜிட்டல் கவசத்தை தயாரித்துள்ளது.
இதன்படி, தங்கள் வீடுகளை பூட்டி விட்டு, வெளியே செல்லும் சந்தர்ப்பங்களில் வீட்டு உரிமையாளர், போலீஸ் துறைக்கு தகவல் தெரிவித்தால், போ லீஸ் துறையினர், அத்தகைய வீடுகளை தங்களின் சிறப்பு கண்காணிப்பில் வைப்பர்.
பொதுமக்கள் தாங்கள் பூட்டி விட்டு சொந்த ஊருக்கு புறப்படுவதற்கு குறைந்தது, 24 மணி நேரத்திற்கு முன், அருகில் உள்ள போலீஸ் நிலையத்திற்கு சென்று போலீஸ் துறை இணையதளம் மூலம் தங்கள் வீட்டு முகவரி, மொபைல் எண், வீட்டுக்கு எப்போது திரும்புவர் என்பதை தெரிவிக்க வேண்டும் அல்லது பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்யப்பட்ட வீட்டின் முன் போலீஸ் துறை, ஒரு தனித்துவமான, கியூ ஆர்., கோடு ஸ்டிக்கரை ஒட்டும். போலீஸ் துறை இ- - பீட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, பூட்டப்பட்ட வீடு பகுதியில் முறையாக ரோந்து செல்லும்போது, ரோந்து பணியில் உள்ள போலீசார், பகல் மற்றும் இரவு நேரங்களில் அந்த வீட்டிற்கு சென்று, கியூ.ஆர்., கோடை ஸ்கேன் செய்ய வேண்டும். இது, போலீஸ் துறை அந்த இடத்திற்கு சென்று வந்ததை உறுதிப் படுத்தும்.
மேலும், போலீஸ் துறையினர் வீட்டிற்கு சென்று, ஆய்வு செய்தவுடன் அவர்களின் வருகை குறித்து வீட்டு உரிமையாளரின் மொபைல் போனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பப்படும். இந்த சேவையை பொதுமக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
