ADDED : ஜூன் 10, 2026 02:54 AM
தார்வாட்: தார்வாட் மாவட்டத்தின், பல்வேறு கிராம பஞ்சாயத்துகளில், பொது மக்களின் பணிகளுக்கு லஞ்சம் பெறப்படுகிறது.
அரசு வழங்கும் கோடிக்கணக்கான ரூபாய் நிதியுதவியை, தவறாக பயன்படுத்துகின்றனர். பணிகள் நடத்தாமலேயே போலியான ஆவணங்கள் உருவாக்கி, உருவாக்கி, பணத்தை கொள்ளையடிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்தது.
கிராமங்களில் மேற்கொள்ளப்படும் சாலை பணிகள், சாக்கடை பணிகள் உட்பட மற்ற பணிகள் தரமாக இல்லை என, தொடர்ந்து லோக் ஆயுக்தாவுக்கு புகார்கள் வந்தன.
எனவே தார்வாட் மாவட்டத்தின், முக்கியமான கிராம பஞ்சாயத்துகளான கரகா, தடகோடா, அம்மிபாவி உட்பட 24 கிராம பஞ்சாயத்து அலுவலகங்களில், லோக் ஆயுக்தா அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர். கோப்புகள், ஆவணங்களை கைப்பற்றி ஆய்வு செய்கின்றனர்.
கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகள், நரேகா திட்டம் தொடர்பான முக்கியமான கோப்புகள், சொத்து வரி வசூலித்த ஆவணங்களை, அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். கிராம பஞ்சாயத்து அதிகாரிகள், ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.
