பலா விளைச்சல் அமோகம் கோலார் விவசாயிகள் மகிழ்ச்சி
பலா விளைச்சல் அமோகம் கோலார் விவசாயிகள் மகிழ்ச்சி
ADDED : ஜூன் 10, 2026 02:41 AM
தங்கவயல்: கர்நாடகாவின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் நிலையில், பல இடங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. வெயிலுக்கு இதமான குளிர்பானங்கள், பலா பழங்களை மக்கள் அதிகமாக வாங்கி செல்கின்றனர்.
இதனால் பலா பழத்திற்கு மவுசு அதிகரித்து உள்ளது. கோலாரின் வேம்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஏராளமான பலா தோட்டங்கள் உள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தாலும், பலா பழம் அமோகமாக விளைகின்றன. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சாலையோரம் பலா பழங்களை வைத்து விற்பனை செய்கின்றனர். சென்னை, திருப்பதிக்கு கார் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோர், வாகனங்களை நிறுத்தி பலா பழங்களை ருசித்து சாப்பிடுவதுடன், பழங்களை வாங்கியும் செல்வதால் விற்பனை சூடுபிடித்து உள்ளது. நடுத்த அளவிலான பலா பழம் 200 ரூபாய் முதல் 300 ரூபாய் வரையிலும்; பெரிய பழங்கள் 300 ரூபாய் முதல் 400 ரூபாய் வரையும் விற்பனை ஆகிறது. ஆந்திரா, தமிழகத்தில் இருந்தும் வியாபாரிகள், பலா பழங்கள் வாங்க கோலாருக்கு வருகின்றனர்.
வியாபாரிகளான சாந்தகுமார், அன்வர் கூறுகையில், 'பலா மரங்கள் எங்களை எப்போதும் கைவிடுவது இல்லை. கனமழை, வறண்ட வானிலை இருந்தாலும் விளைச்சல் அமோகமாக உள்ளது. பழுத்த பலா பழங்களின் வாசனை மக்களை ஈர்க்கிறது. இனிப்பாகவும், பெரிதாகவும் இருப்பதால் மக்கள் விரும்பி வாங்குகின்றனர்.
'வெளிமாநில வியாபாரிகளும் வருவது மகிழ்ச்சி. தரமான பழங்களை அதிக விலை கொடுத்து வாங்க வியாபாரிகளும், நுகர்வோரும் தயங்குவது இல்லை' என்றனர்.
