/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் மழை பாதிப்புக்கு நீங்களே காரணம் அதிகாரிகளுக்கு லோக் ஆயுக்தா நீதிபதி 'டோஸ்'
/
பெங்களூரில் மழை பாதிப்புக்கு நீங்களே காரணம் அதிகாரிகளுக்கு லோக் ஆயுக்தா நீதிபதி 'டோஸ்'
பெங்களூரில் மழை பாதிப்புக்கு நீங்களே காரணம் அதிகாரிகளுக்கு லோக் ஆயுக்தா நீதிபதி 'டோஸ்'
பெங்களூரில் மழை பாதிப்புக்கு நீங்களே காரணம் அதிகாரிகளுக்கு லோக் ஆயுக்தா நீதிபதி 'டோஸ்'
ADDED : மே 24, 2025 04:46 AM

பெங்களூரு:பெங்களூரில் பெய்த கன மழையால் ஏற்பட்ட அசம்பாவிதங்களுக்கு, பெங்களூரு மாநகராட்சியின் அலட்சியமே காரணம் என்பதால், கர்நாடக லோக் ஆயுக்தா கொதிப்படைந்துள்ளது.
பெங்களூரில் ஒரு நாள் மழை பெய்தாலும், பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறுகின்றன. ஆண்டு தோறும் மழைக்காலத்தில் மிதக்கும் நகராக மாறுகிறது. கடந்த ஒரு வாரமாக மழை மக்களை அவதிப்படுத்தியது. பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.
பெங்களூரில் வெள்ள பாதிப்பு பிரச்னைக்கு, பெங்களூரு மாநகராட்சியின் அலட்சியமே காரணம் என்ற குற்றச்சாட்டு பல ஆண்டுகளாகவே இருந்து வருகிறது.
மழைநீர் கால்வாய் ஆக்கிரமிக்கப்பட்டதால், தண்ணீர் செல்ல வழியின்றி, குடியிருப்புகளுக்குள் புகுந்து, அசம்பாவிதங்களை ஏற்படுத்துகிறது. இதை அறிந்தும் ஆக்கிரமிப்பை அகற்றுவதில், மாநகராட்சி அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.
வெள்ள பாதிப்பு
சில நாட்களாக பெய்த கன மழையால், பல இடங்களில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பகுதிகளை நேற்று முன்தினம் கர்நாடக லோக் ஆயுக்தா தலைமை நீதிபதி பி.எஸ்.பாட்டீல், உப லோக் ஆயுக்தா நீதிபதிகள் வீரப்பா மற்றும் பனீந்திரா ஆகியோருடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மக்களின் பிரச்னைகளை கேட்டறிந்தார்.
மழை சேதம் தொடர்பாக, அனைத்து தகவல்களுடன் தன் அலுவலகத்தில் ஆஜராகும்படி, பெங்களூரு மாநகராட்சி, குடிநீர் வாரியம், பெங்களூரு மெட்ரோ நிறுவன அதிகாரிகள் என, பல்வேறு துறைகளின் அதிகாரிகளுக்கு, லோக் ஆயுக்தா நீதிபதி பி.எஸ்.பாட்டீல் உத்தரவிட்டிருந்தார்.
இதன்படி நேற்று மதியம் 12:00 மணியளவில், பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் உட்பட, உயர் அதிகாரிகள் லோக் ஆயுக்தா அலுவலகத்துக்கு சென்றனர்.
தனித்தனி வழக்கு
அப்போது அவர்கள் மீது கோபமடைந்த நீதிபதி பி.எஸ்.பாட்டீல், ''சட்டவிரோத ஆக்கிரமிப்பை அகற்றாததே, மழை அசம்பாவிதங்களுக்கு காரணம். ஆக்கிரமிப்பை அகற்ற சட்டப்படி, நடவடிக்கை எடுங்கள்.
''மழை நீர்க்கால்வாய், ஏரிகள் ஆக்கிரமிப்பை அகற்றாதது குறித்து, லோக் ஆயுக்தாவுக்கு புகார் வந்ததால், பெங்களூரு மாநகராட்சியின் எட்டு மண்டல அதிகாரிகள் மீதும், தனித்தனியாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
''மழை அசம்பாவிதங்களை தடுக்க, இதுவரை மேற்கொண்ட, இனி மேற்கொள்ளும் நடவடிக்கை குறித்து அறிக்கை தயாரித்து, லோக் ஆயுக்தாவில் தாக்கல் செய்ய வேண்டும்.
''மழை அசம்பாவிதங்களை தடுப்பதே, நமது குறிக்கோளாக இருக்க வேண்டும். நீங்கள் சரியாக பணியாற்றுகிறீர்களா, இல்லையா என்பதை கண்காணிக்க, தனியார் ஏஜென்சியை நியமிப்போம். பணியில் அலட்சியம் காட்டினால், நான் மவுனமாக இருக்கமாட்டேன்,'' என எச்சரித்தார்.
அலட்சியம் ஏன்?
அதே போன்று, குடிநீர் வாரிய அதிகாரிகளிடமும் அதிருப்தி அடைந்த நீதிபதி பி.எஸ்.பாட்டீல், ''அனைத்து சாக்கடை கால்வாயின் உட் கட்டமைப்பை சரியாக பராமரிக்கவில்லை. உங்களை கேள்வி கேட்போர் யாரும் இல்லையா. குடிநீர் வாரியம் சிறப்பாக பணியாற்றவில்லை.
''உங்கள் வாரியத்தில் பணப்பற்றாக்குறை இல்லவே இல்லை. தேவையான பணத்தை மக்களிடம் வசூலிக்கிறீர்கள். அப்படியிருந்தும் பணியாற்ற அலட்சியம் காட்டுகிறீர்களே ஏன்.
''ஆண்டு தோறும் மழை பெய்யும் போது, இதே சூழ்நிலை ஏற்பட்டால், எப்போது பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். மக்களின் பிரச்னைகளை சரி செய்வது யார். எங்களிடம் சட்ட அதிகாரம் உள்ளது என்பதை மறக்காதீர்கள்.
வரும் நாட்களில் மழை அசம்பாவிதங்கள் ஏற்படாமல், எச்சரிக்கையுடன் பணியாற்றுங்கள். ஒருவேளை அலட்சியம் காட்டினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது, தயவு, தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுப்போம்,'' என எச்சரித்தார்.