/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கு ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் லோக் ஆயுக்தா ரெய்டு
/
அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கு ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் லோக் ஆயுக்தா ரெய்டு
அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கு ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் லோக் ஆயுக்தா ரெய்டு
அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கு ஐ.பி.எஸ்., அதிகாரி வீட்டில் லோக் ஆயுக்தா ரெய்டு
ADDED : ஜூன் 18, 2025 11:15 PM

பெங்களூரு: அரசு அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில், ஐ.பி.எஸ்., அதிகாரி ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி வீட்டில், லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.
கர்நாடகாவின் பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்த வழக்கில், கடந்த 2ம் தேதி சித்ரதுர்காவை சேர்ந்த முன்னாள் போலீஸ் ஏட்டு நிங்கப்பா, 50, என்பவரை, லோக் ஆயுக்தா போலீசார் கைது செய்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணை, மொபைல் போன் தரவுகளின் அடிப்படையில், பெங்களூரில் லோக் ஆயுக்தா பிரிவு 1ல் எஸ்.பி.,யாக பணியாற்றிய ஐ.பி.எஸ்., ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷியுடன் தொடர்பு இருப்பது தெரிந்தது. இதுபற்றி அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
லோக் ஆயுக்தா எஸ்.பி., பதவியில் இருந்து, ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி கடந்த 12ம் தேதி விடுவிக்கப்பட்டு, காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். நிங்கப்பாவிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மேலும் பரபரப்பு தகவல்கள் வெளியாகின.
பணிநீக்கம்
சித்ரதுர்கா மாவட்ட லோக் ஆயுக்தாவில் ஏட்டாக பணியாற்றிய நிங்கப்பா, பணிக்கு சரியாக வராததால் இரண்டு ஆண்டுகளுக்கு முன், பணி நீக்கம் செய்யப்பட்டார். ஆனாலும் அவர், லோக் ஆயுக்தாவில் பணியாற்றும் உயர் அதிகாரிகள் மற்றும் சில அரசியல்வாதிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்து உள்ளார்.
மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பணியாற்றும் அதிகாரிகள், தங்கள் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்க்கும்போது, அவர்கள் வீடுகளில் லோக் ஆயுக்தா சோதனை நடத்துவது வழக்கம்.
இந்த சோதனை பற்றி முன்கூட்டியே அறிந்து கொள்ளும் நிங்கப்பா, சொத்து சேர்க்கும் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, 'உங்கள் வீட்டில் லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்த உள்ளனர். அவர்களை வரவிடாமல் தடுக்க, பணம் தர வேண்டும்' என்று கூறி, அதிகாரிகளிடம் இருந்து லட்சக்கணக்கில் பணம் வாங்கி உள்ளார்.
கிரிப்டோ கரன்சி
பணத்தை லோக் ஆயுக்தாவில் பணியாற்றும், உயர் அதிகாரிகளுக்கு பகிர்ந்து கொடுத்து, ஒரு பங்கை தானும் வைத்துக் கொண்டார்.
அதிகாரிகளிடம் இருந்து வாங்கிய பணத்தில், கிரிப்டோ கரன்சியிலும் முதலீடு செய்துள்ளார். ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி உள்ளிட்ட சில அதிகாரிகள் பெயரில், கிரிப்டோ கரன்சி வாங்கியதும் தெரிய வந்தது.
நிங்கப்பாவிடம் இருந்து 13 கிரிப்டோ கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் அடிப்படையில், கோரமங்களாவில் உள்ள ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி வீட்டில், நேற்று முன்தினம் இரவு லோக் ஆயுக்தா போலீசார் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் ஆவணங்கள், கிரிப்டோ கரன்சிகள் எதுவும் சிக்கவில்லை.
அதிகாரிகளை மிரட்டி பணம் பறித்ததில், ஐ.பி.எஸ்., அதிகாரிக்கு தொடர்பு இருந்தாலும், அவர் மீது இதுவரை வழக்கு பதிவாகவில்லை.
நிங்கப்பாவிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து, போலீஸ் அதிகாரிகள், அரசியல்வாதிகள் பெயரை அழித்து, இந்த வழக்கை மூடிமறைக்க முயற்சி நடப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், ஸ்ரீநாத் மகாதேவ் ஜோஷி முன் ஜாமின் கேட்டு பெங்களூரு லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.