லோக் ஆயுக்தா போலீசாருக்கு ரூபாய் 4.35 கோடி லஞ்சம்?
லோக் ஆயுக்தா போலீசாருக்கு ரூபாய் 4.35 கோடி லஞ்சம்?
ADDED : பிப் 10, 2026 04:37 AM

மைசூரு: முடா வழக்கில் முதல்வர் சித்தராமையா குற்றமற்றவர் என, அறிக்கை தாக்கல் செய்ய, லோக் ஆயுக்தா போலீசாருக்கு, 4.35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டதாக, சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா பகீர் புகார் தெரிவித்துள்ளார்.
முடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தில், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, 56 கோடி ரூபாய் மதிப்பிலான, 14 வீட்டுமனைகளை வாங்கியதாக முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி மீது குற்றச்சாட்டு எழுந்தது. மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் விசாரித்தனர். முதல்வர் உட்பட நான்கு பேர் குற்றமற்றவர்கள் என்று, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த அறிக்கையை, மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம், கடந்த மாதம் ஏற்றுக்கொண்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில், மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா மேல்முறையீடு செய்து உள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் கூறுகையில், ''முடா வழக்கில் முதல்வர் உட்பட நான்கு பேரும் குற்றமற்றவர்கள் என்று அறிக்கை தாக்கல் செய்ய, லோக் ஆயுக்தா போலீசாருக்கு, 4.35 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு பேப்பர் என்னிடம் உள்ளது. நீதிமன்றத்தில் கொடுக்க உள்ளேன். லஞ்சம் கொடுத்ததில் முடா முன்னாள் கமிஷனர் நடேஷுக்கு தொடர்பு உள்ளது,'' என்றார்.
