/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சிறுமி பலாத்கார வழக்கில் சிக்கிய லோகேஸ்வர மடம் இடித்து அகற்றம்
/
சிறுமி பலாத்கார வழக்கில் சிக்கிய லோகேஸ்வர மடம் இடித்து அகற்றம்
சிறுமி பலாத்கார வழக்கில் சிக்கிய லோகேஸ்வர மடம் இடித்து அகற்றம்
சிறுமி பலாத்கார வழக்கில் சிக்கிய லோகேஸ்வர மடம் இடித்து அகற்றம்
ADDED : மே 30, 2025 06:25 AM

பெலகாவி: சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, தற்போது சிறையில் கம்பி எண்ணும் லோகேஸ்வர சுவாமியின் மடம், இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.
பெலகாவி மாவட்டம், சிக்கோடி தாலுகாவின், மேகலி கிராமத்தில், லோகேஸ்வர சுவாமிகள், ஸ்ரீராம மந்திர் நடத்தினார். இவருக்கு ஏராளமான பக்தர்கள் இருந்தனர். தங்கள் பிள்ளைகளுக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டால், சில நாட்கள் வரை மடத்தில் விட்டு வைத்திருந்தால், குணம் அடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
அதேபோன்று பக்தர் ஒருவர், பி.யு.சி., முதலாம் ஆண்டு படிக்கும், தன் 17 வயது மகளுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், அவரை இம்மாதம் 13ம் தேதியன்று, மடத்தில் விட்டு சென்றிருந்தார்.
இந்த சிறுமியை வீட்டில் விடுவதாக கூறி, காரில் அழைத்து சென்ற லோகேஸ்வர சுவாமிகள், பாகல்கோட், ராய்ச்சூரில் லாட்ஜ் ஒன்றில் வைத்து, பாலியல் பலாத்காரம் செய்தார். இரண்டு நாட்கள் லாட்ஜில் வைத்திருந்தார். தன் வீட்டுக்கு செல்ல வேண்டும் என, சிறுமி அழுது பிடிவாதம் பிடித்ததால், மே 16ம் தேதியன்று, அவரை லோகேஸ்வர சுவாமி பாகல்கோட்டின், மஹாலிங்கபுரா பஸ் நிலையத்தில் விட்டு விட்டு சென்றார். சிறுமியை தந்தை வந்து, வீட்டுக்கு அழைத்து சென்றார்.
லோகேஸ்வர சுவாமியின் மிரட்டலால், சிறுமி நடந்த விஷயத்தை பெற்றோரிடம் கூறவில்லை. தன்னை திடப்படுத்தி கொண்டு, மே 21ம் தேதி நடந்த விஷயத்தை பெற்றோரிடம் கூறினார். அவர்கள் உடனடியாக போலீசாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து லோகேஸ்வர சுவாமியை கைது செய்தனர்.
இவரது செயலால் கொதிப்படைந்த கிராமத்தினர், மடத்துக்குள் நுழைந்து கைக்கு கிடைத்த பொருட்களை எடுத்து சென்றனர்.
இதற்கிடையே இந்த மடம், அரசுக்கு சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டிருப்பது தெரிந்தது. கிராமத்தின் சர்வே எண் 225ல், 8 ஏக்கர் அரசு நிலத்தை அபகரித்து, மடம் கட்டியுள்ளார்.
இதையறிந்த ராய்பாக் தாசில்தார் தலைமையிலான அதிகாரிகள், நேற்று காலை கிராமத்துக்கு வந்தனர். பொக்லைன் இயந்திரத்தின் உதவியுடன், மடத்தை இடித்து தரைமட்டமாக்கினர்.