/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வேண்டிய வரம் அளிக்கும் ரங்கநாதர்
/
வேண்டிய வரம் அளிக்கும் ரங்கநாதர்
ADDED : ஜூலை 29, 2025 01:38 AM

கர்நாடகாவில் புராதன கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. மாறுபட்ட கட்டமைப்புடன் தென்படுகின்றன. இங்கு குடிகொண்டுள்ள கடவுள்கள், சக்தி வாய்ந்தவர்கள். இத்தகைய சக்தி வாய்ந்த கோவில் சாம்ராஜ்நகரில் அமைந்துள்ளது.
சாம்ராஜ்நகரின் உம்மத்துார் கிராமத்தில் ரங்கநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கும், மைசூரின் யது வம்சத்தினருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. 12 மற்றும் 13ம் நுாற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டதாக, வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. ஹனுமப்ப உடையார் எதிரிகளுடன் போரிட்டு வெற்றி பெற்றார். இந்த வெற்றியின் அடையாளமாக, உம்மத்துார் கிராமத்தில், ரங்கநாத சுவாமி கோவிலை கட்டினார்.
அர்ப்பணிப்பு அவருக்கு பின் ஆட்சிக்கு வந்த யது வம்சத்தினர், கோவிலை மேலும் மேம்படுத்தினர். இது கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலாகும். ஒரு முறை மைசூரு மன்னராக இருந்த சிக்க தேவராயர், கோவிலில் உள்ள கிருஷ்ணர் சிலையை, தன் அரண்மனையில் பிரதிஷ்டை செய்ய விரும்பினார். எனவே கோவிலில் இருந்த சிலையை கொண்டு செல்ல முயற்சித்தார். மன்னர் சிக்க தேவராயரின் கனவில் தோன்றிய கிருஷ்ணர், 'நான் இதே இடத்தில் நிலைத்திருப்பேன்' என, கூறினாராம். அதன்பின் மன்னர் சிலையை கோவிலில் வைத்து விட்டு சென்றாராம். அதன்பின் இவரது வம்சத்தினர் யாரும், இக்கோவிலுக்கு வந்ததே இல்லையாம்.
ரங்கநாத சுவாமி கோவில், முக்கோண வடிவில் அமைந்துள்ளது. கோவிலின் மத்தியில் நின்றால், லட்சுமி தேவி, கிருஷ்ணர், ரங்கநாத சுவாமியை காணலாம். இங்கு குடிகொண்ட ரங்கநாதரை பார்த்தால், கேரளா, திருவனந்தபுரத்தில் உள்ள அனந்த பத்மநாப சுவாமியை தரிசனம் செய்த அனுபவம் ஏற்படும். ரங்கநாதர் சர்ப்பத்தின் மீது சயனிக்கும் தோற்றத்தில், பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
கஷ்டங்களால் துவண்டுள்ள பக்தர்கள், ரங்கநாத சுவாமி முன் நின்று, மனமுருகி லலிதா சஹஸ்ரநாமத்தை பாராயணம் செய்தால் போதும். கஷ்டங்கள் பஞ்சாய் பறந்து போகும்.
வாழ்க்கையில் நிம்மதி, மகிழ்ச்சி ஏற்படும் என்பது ஐதீகம். ஆனால் இக்கோவிலின் மகத்துவம், பலருக்கும் தெரியவில்லை. பக்தர்களும் அதிக அளவில் வருவதில்லை
- நமது நிருபர் - .