/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சாலையில் கவிழ்ந்த லாரி; கோழிகளை அள்ளிய மக்கள்
/
சாலையில் கவிழ்ந்த லாரி; கோழிகளை அள்ளிய மக்கள்
ADDED : ஜூலை 02, 2025 11:14 PM

ஷிவமொக்கா: கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்து விழுந்து நுாற்றுக்கணக்கான கோழிகள் இறந்தன. அவற்றை அவ்வழியாக சென்றவர்கள் அள்ளிச் சென்றனர்.
சிக்கமகளூரு மாவட்டம், கடூரில் இருந்து ஷிவமொக்கா மாவட்டம் சாகருக்கு, லாரியில் கோழிகள் ஏற்றி செல்லப்பட்டன. நேற்று அதிகாலை சாகரின் ஆனந்தபுரம் மும்பாலு ஏரி அருகே வளைவில் திரும்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து லாரி கவிழ்ந்தது.
இந்த விபத்தில் கோழிகள் அடைத்து வைத்திருந்த கூண்டுகள் சரிந்து கீழே விழுந்தன. இதில், 300க்கும் அதிகமான கோழிகள் இறந்தன. சில கோழிகள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தன.
சாலையில் கோழிகள் இறந்து கிடப்பதை பார்த்த மக்கள் அருகே வந்தனர். லாரி உரிமையாளர் பயாஸ், 'கோழிகளை எடுத்துச் செல்லுங்கள்' என கூறினார். வாகன ஓட்டிகளும், தங்கள் வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்திவிட்டு, அள்ளிச் சென்றனர்.
கோழியை எடுத்து சென்ற ஆனந்தபூரை சேர்ந்த தொழிலாளி பாஸ்கர் கூறுகையில், ''தொடர் மழையால் குளிராக உள்ளது. இன்றிரவு கோழிக்கறி சாப்பிடலாம்,'' என சிரித்தபடி சென்றார்.
லாரி உரிமையாளர் பயாஸ் கூறுகையில், ''வளைவு பகுதியில் கார் ஒன்று நின்றிருந்தது. அதை இடிக்காமல் தவிர்க்க முயன்றபோது, கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. 4.5 டன் கோழிகளை ஏற்றி வந்தோம்.
''இனி கடையில் வாங்கமாட்டார்கள். மக்களே எடுத்துச் செல்லட்டும். இவ்விபத்தில் எனக்கு 8 லட்சம் ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது,'' என்றார்.
தகவல் அறிந்த ஆனந்தபுரம் போலீசார், லாரியை மீட்டு போக்குவரத்தை சரி செய்தனர்.