ADDED : ஏப் 03, 2025 07:52 AM

தார்வாட் : காதலிக்கும்படி கூறி இளம்பெண்ணை தாக்கி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
தார்வாட், குந்தோல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிராஜ், 26. இவர் அதே பகுதியை சேர்ந்த ஒரு இளம்பெண்ணை ஒரு தலையாக காதலித்து வந்தார். இளம்பெண்ணிடம் தன் காதலை கூறி உள்ளார். இவரது காதலை அந்த பெண் ஏற்றுக் கொள்ளவில்லை. ஆத்திரமடைந்த சிராஜ், நடந்து செல்லும்போது, இளம்பெண்ணை ஆபாசமான கோணங்களில் படம் எடுத்துள்ளார்.
கடந்த மாதம் 31ம் தேதி, இந்த புகைப்படங்களை காட்டி தன்னை காதலிக்குமாறு அவருக்கு சிராஜ் மீண்டும் தொந்தரவு கொடுத்து, தாக்கினார். மனம் உடைந்த அந்த பெண், நேற்று முன்தினம் துாக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
இதை அறிந்த அவரது வீட்டார், அவரை மீட்டு உடனடியாக ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் அனுமதித்தனர். தீவிர சிகிச்சைக்குப் பின் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
தற்கொலை முயற்சிக்கான காரணத்தை அறிந்த அவரது பெற்றோர், சிராஜ் மீது தார்வாட் மாவட்ட போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசாரும் விசாரணை நடத்தி நேற்று சிராஜை கைது செய்தனர்.

