ADDED : ஜூன் 06, 2026 11:41 PM
கலபுரகி: தங்களின் காதலுக்கு, பெற்றோர் எதிர்ப்பு தெரிவிப்பர் என்ற பீதியில், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்து, காதலர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
கலபுரகி மாவட்டம், ஷஹபாத் தாலுகாவின், தேவன தேகநுாரு கிராமத்தில் வசித்தவர் சிவப்பா, 23. இவரும், இதே கிராமத்தில் வசிக்கும், 16 வயது இளம் பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் சேர்ந்து ஊர் சுற்றினர்.
பெற்றோரிடம் தங்களின் காதலை தெரிவித்து, விரைவில் திருமணம் செய்து கொள்ளவும், முடிவு செய்திருந்தனர்.
சிறுமிக்கு திருமண வயது வரவில்லை. அது மட்டுமின்றி இருவரும், வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள். எனவே, திருமணத்துக்கு பெற்றோர் சம்மதிக்க மாட்டார்கள் என, காதலர்கள் பயந்தனர்.
இதனால் கிராமத்தின் அருகில் உள்ள தண்டவாளத்தில், தலை வைத்து படுத்து, ரயிலில் சிக்கி, நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டனர். இதை கண்ட அப்பகுதியினர், போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
வாடி ரயில் நிலைய போலீசார், அங்கு வந்து பார்வையிட்டனர். இருவரின் உடல்களை மீட்டனர். இது குறித்து, விசாரணை நடத்துகின்றனர்.
