அரிய வன விலங்குகள் மீட்பு டாக்டர் உட்பட 3 பேர் கைது
அரிய வன விலங்குகள் மீட்பு டாக்டர் உட்பட 3 பேர் கைது
ADDED : ஜூன் 06, 2026 11:42 PM

பெங்களூரு: பெங்களூரில் அடுக்கு மாடி குடியிருப்பில் மருத்துவர் ஒருவரின் வீட்டில் இருந்து நான்கு வகை பாம்பு உட்பட அரிய வகை விலங்குகள் கைப்பற்றப்பட்டன. டாக்டர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு குமாரசாமி லே - அவுட்டில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வருபவர் டாக்டர் ராஜ் கமல், 50. இவரின் வீட்டில் அரிய வகை வன விலங்குகள் வைத்திருப்பதாக, வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதன் அடிப்படையில், வனத்துறையினர், வனத்துறையின் சி.ஐ.டி., பிரிவினர் சோதனை நடத்தியபோது, பல்லி, ஒரு நட்சத்திர ஆமை, 14 வகையான ஆமைகள், நான்கு வகையான பாம்புகள் உட்பட பல வனவிலங்குகள் காணப்பட்டன.
வீட்டில் இருந்த சூட்கேஸ்களில், விமான நிலையம் வழியாக வந்ததற்கான டோக்கன்கள் காணப்பட்டன.
இது சம்பந்தமாக ராஜ்கமல், ஹிரித்திக், கிரிஷ் நாக் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவர்கள் மூவரும், விலங்குகளை கடத்தி வருவதற்காகவே, அடிக்கடி தாய்லாந்து, மலேசியாவுக்கு சென்று வந்துள்ளனர். அத்துடன் இன்ஸ்டாகிராமில், '@zoo2you' என்ற பெயரில், பள்ளிகள், பொது இடங்களில், தாங்கள் கடத்தி வந்த விலங்குகளை வைத்து 'வனவிலங்கு கல்வி' நிகழ்ச்சிகளை நடத்தி வந்துள்ளனர்.
போலீசார் விசாரிக்கின்றனர்.
