மேக்ரி சதுக்கம் – ஹெப்பால் சாலை இன்று முதல் 18 மாதங்கள் மூடல்
மேக்ரி சதுக்கம் – ஹெப்பால் சாலை இன்று முதல் 18 மாதங்கள் மூடல்
UPDATED : நவ 06, 2026 07:21 PM
ADDED : நவ 06, 2026 12:18 AM
பெங்களூரு: உயர்மட்ட மேம்பால சாலை பணிகள் எதிரொலியாக, மேக்ரி சதுக்கம் – ஹெப்பால் இடையிலான பிரதான சாலை, இன்று முதல் 18 மாதங்கள் மூடப்பட உள்ளது.
பெங்களூரு போக்குவரத்து போலீசார் நேற்று வெளியிட்ட அறிக்கை:
பெங்களூரு பல்லாரி சாலையில் உள்ள ஹெப்பாலின் யு.ஏ.எஸ்., பணியாளர் குடியிருப்பில் இருந்து மேக்ரி சதுக்கம் வரை, பி.டி.ஏ., எனும் பெங்களூரு வளர்ச்சி ஆணையம் சார்பில் உயர்மட்ட மேம்பால சாலை அமைக்கப்பட உள்ளது.
வாகன போக்குவரத்து சுமூகமாக இருக்கும் நோக்கில், மேக்ரி சதுக்கம் முதல் ஹெப்பால் வரையிலான பிரதான சாலை, இன்று முதல் 18 மாதங்கள் முழுமையாக மூடப்பட உள்ளன. கனரக வாகனங்களுக்காக மாற்று வழிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நகரின் மைய பகுதியில் இருந்து பல்லாரி சாலை வழியாக விமான நிலையம் செல்லும் வாகன ஓட்டிகள், இனி பல்லாரி சாலைக்கு செல்லாமல் ஓல்டு ஹைகிரவுண்ட் சந்திப்பு, கல்பனா சந்திப்பு, ஓல்டு உதயா டிவி சந்திப்பு, கன்டோன்மென்ட் ரயில் நிலையம், டானரி சாலை, நாகவாரா சாலை வழியாக செல்ல வேண்டும்
யஷ்வந்த்பூரில் இருந்து விமான நிலையம் செல்வோர் மத்திகெரே ரோட்டில் சென்று, பி.இ.எல்., சதுக்கத்தில் வலது பக்கம் திரும்பி வெளிவட்ட சாலை வழியாக செல்ல வேண்டும்
விமான நிலையத்தில் இருந்து நகரின் மைய பகுதிகளுக்கு வரும் வாகனங்கள், ஹெப்பாலில் இருந்து இடது பக்கம் திரும்பி நாகவாரா சந்திப்பில் சென்று, வலது பக்கம் திரும்பி பம்பு பஜார், குயின்ஸ் சாலை வழியாக செல்ல வேண்டும். இல்லாவிட்டால் ஹெப்பாலில் வலது பக்கம் திரும்பி, வெளிவட்ட சாலை வழியாக சென்று, குவெம்பு சதுக்கம், கோரகுன்டேபாளையா சந்திப்பு வழியாக சென்று ராஜ்குமார் சாலை வழியாக பயணிக்கலாம்
இலகுரக வாகனங்களில் வருவோர் ஹெப்பால் மேம்பாலத்தை கடநத பின், இணைப்பு சாலையில் சென்று, முக்கிய சாலையை அடையலாம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.
