/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மே 29ல் பள்ளிகள் திறப்பு மது பங்காரப்பா அறிவிப்பு
/
மே 29ல் பள்ளிகள் திறப்பு மது பங்காரப்பா அறிவிப்பு
ADDED : மே 18, 2025 08:46 PM

பெங்களூரு : கர்நாடகாவில் கோடை விடுமுறை முடிந்து, மே 29ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. அதற்கு முன்னதாகவே, மாணவ - மாணவியருக்கு சீருடை, பாட புத்தகங்கள் வழங்கும்படி அதிகாரிகளுக்கு, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
நடப்பாண்டு ஏப்ரலில், ஆண்டு தேர்வு முடிந்த பின், பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இம்மாதம் 29ம் தேதி, விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. ஆண்டு தோறும் பள்ளிகள் திறந்து, இரண்டு மாதங்கள் ஆனாலும், பாட புத்தகங்கள் கிடைக்காமல் மாணவர்கள் அவதிப்படுவது வழக்கம்.
இம்முறை அப்படி நடக்காமல், பள்ளி திறப்பதற்கு முன்பே பாட புத்தகங்கள் கிடைக்க வேண்டும் என, கல்வித்துறை விரும்புகிறது. இது குறித்து, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. தொடக்க பள்ளி கல்வித்துறை அமைச்சர் மதுபங்காரப்பா கூறியதாவது:
கோடை விடுமுறை முடிந்து, இம்மாதம் 29ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. அன்றைய தினம் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகள், அதிகாரிகள் அரசு பள்ளிகளுக்கு சென்று, மாணவர்களை வரவேற்பர். பள்ளியின் ஆரம்ப தினமே, மாணவர்களுக்கு சீருடை, பாட புத்தகங்கள் வழங்கப்படும். ஷூ, சாக்ஸ்கள் கட்டம், கட்டமாக வழங்குவோம். தரமான கல்வி அளிக்க வேண்டும் என, முதல்வர் சித்தராமையா கூறியுள்ளார்.
கல்யாண கர்நாடகா பகுதியில் 5,600, மற்ற பகுதிகளில் 500 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர், ஆசிரியைகளின் பிள்ளைகள் அரசு பள்ளியிலேயே படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லை. ஒருவேளை சட்டம் அமலுக்கு வந்தால், இதைப் பற்றி ஆலோசிக்கலாம்.
கல்விக்கு எந்த எல்லையும், கட்டுப்பாடும் இல்லை. தனியாருக்கு எதிராக, கல்வித்துறையை நடத்த முடியாது. தரமான கல்வியை அளித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர்களை அரசுப் பள்ளிக்கு வரும்படி ஊக்கப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.