/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'அலமாட்டி அணை விஷயத்தில் மஹா., அரசு அரசியல் செய்கிறது'
/
'அலமாட்டி அணை விஷயத்தில் மஹா., அரசு அரசியல் செய்கிறது'
'அலமாட்டி அணை விஷயத்தில் மஹா., அரசு அரசியல் செய்கிறது'
'அலமாட்டி அணை விஷயத்தில் மஹா., அரசு அரசியல் செய்கிறது'
ADDED : ஆக 02, 2025 01:57 AM

விஜயபுரா: அலமாட்டி அணையின் உயரத்தை அதிகரிக்கும் விஷயத்தில், மஹாராஷ்டிரா அரசு அரசியல் செய்வதாக, கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி. பாட்டீல் குற்றஞ்சாட்டிஉள்ளார்.
விஜயபுராவில் கிருஷ்ணா ஆற்றின் குறுக்கே உள்ள, அலமாட்டி அணையின் உயரத்தை 519.60 மீட்டரில் இருந்து 525.25 மீட்டராக உயர்த்த, கர்நாடக அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் இதற்கு மஹாராஷ்டிரா கடும் எதிர்ப்புத் தெரிவிக்கிறது. அணையின் உயரத்தை அதிகரித்தால் சாங்லி, கோலாப்பூரில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்பது, மஹாராஷ்டிரா அரசின் வாதமாக உள்ளது.
அணையை உயர்த்த அனுமதி தரக் கூடாது என்று, மத்திய ஜல்சக்தி அமைச்சர் சி.ஆர்.பாட்டீலுக்கு, மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து கர்நாடக தொழில் அமைச்சரும், விஜயபுரா மாவட்ட பொறுப்பு அமைச்சருமான எம்.பி.பாட்டீல் நேற்று அளித்த பேட்டி:
அலமாட்டி அணையின் உயரத்தை அதிகரித்தால், சாங்லி, கோலாப்பூர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் என்று கூறும், மஹாராஷ்டிரா அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள முடியாது .
அலமாட்டி அணை, 2005ல் இருந்து தான் பயன்பாட்டில் உள்ளது. அதற்கு முன்பே 1964, 1976, 1994, 1997ல் சாங்லியில் பயங்கர வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
மஹாராஷ்டிரா அரசின் வாதத்தை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆனாலும் அவர்கள் திரும்ப, திரும்ப ஒரே கருத்தை கூறுகின்றனர். நீர்நிலைப் பகுதிகளை ஆக்கிரமிப்பதால் சாங்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இதை நிரூபிக்கும் அறிக்கை என்னிடம் உள்ளது.
இதை நம் மாநில நீர்ப்பாசன அமைச்சர் சிவகுமாரிடம் வழங்குவேன். நீர்நிலை ஆக்கிரமிப்பு பிரச்னையில், மஹாராஷ்டிரா அரசு முதலில் கவனம் செலுத்த வேண்டும். அலமாட்டி அணை விஷயத்தில் அம்மாநில அரசு அரசியல் செய்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.