/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அமைச்சரவை கூட்டத்தில் மஹாதேவப்பா, ஜார்ஜ் மோதல்
/
அமைச்சரவை கூட்டத்தில் மஹாதேவப்பா, ஜார்ஜ் மோதல்
ADDED : அக் 31, 2025 04:28 AM

பெங்களூரு:  அமைச்சர்கள் மஹாதேவப்பா, ஜார்ஜ் இடையிலான வார்த்தை மோதலால், அமைச்சரவை கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரு விதான் சவுதாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில், அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. ஆரோக்கியமான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா திடீரென ஆக்ரோஷமாக பேசினார்.
''எஸ்.சி., மற்றும் எஸ்.டி., சமூகத்திற்கான பட்டியல் ஜாதி துணை திட்டம், பழங்குடி துணை திட்டத்தின் கீழ் ஒதுக்கப்படும் நிதியை, அரசு இது வரை விடுவிக்கவில்லை. இந்த சமூகங்களுக்கு அநீதி ஏற்படுவதை பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க மாட்டேன். நிதியை வேறு ஏதாவது துறைக்கு மாற்றி உள்ளீர்களா; என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்?'' என, உரத்த குரலில் மஹாதேவப்பா கேள்வி எழுப்பினார்.
மஹாதேவப்பாவின் கோபத்தை பார்த்து, முதல்வரும், சக அமைச்சர்களும் அதிர்ச்சி அடைந்தனர். அவரை சமாதானப்படுத்த முயன்றனர்.
இந்த நேரத்தில் மின்சார அமைச்சர் ஜார்ஜ் எழுந்து பேசும்போது, ''சமூக நலத்துறையில் இருந்து கங்கா கல்யாண் திட்டத்தின் கீழ், என் துறைக்கு வர வேண்டிய நிதி இன்னும் வரவில்லை,'' என்றார்.
இதனால் மேலும் கோபம் அடைந்த மஹாதேவப்பா, ''நான் என்ன பேசிக் கொண்டு இருக்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என கேள்வி எழுப்ப, இருவருக்கும் இடையே கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.
கோபத்தில் மஹாதேவப்பா, அமைச்சரவை கூட்டத்தில் இருந்து வெளியேற முயன்றார். அவரை அமைச்சர்கள் சமாதானம் செய்து அமர வைத்தனர்.

