ADDED : ஜூலை 09, 2026 09:16 PM

- நமது நிருபர் -
குல்பர்கா மிஸ்டிக் அணியை, 3 ரன்கள் வித்தியாசத்தில் கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு அணி திரில் வெற்றி பெற்றது.
கே.எஸ்.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில், மஹாராஜா டிராபி டி - 20 கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நேற்று முன்தினம் கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு - குல்பர்கா மிஸ்டிக் அணிகள் மோதின.
முதலில் கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு அணியின், ஆதர்ஷ் - நிகின் ஜோஸ் களம் இறங்கினர். துவக்கத்தில் நன்றாக ஆடிய இந்த ஜோடி, 3.4 வது ஓவரில், நரோன்ஹா பந்தில் நிகின் ஜோசப் அவுட்டானார்.
அடுத்து களம் இறங்கிய அணியின் கேப்டன் கருண் நாயர், ஆதர்சுடன் சேர்ந்தார். ஆனால் கிராந்தி குமார் பந்தில் ஆதர்ஷ் அவுட்டார்.
தொடர்ந்து வந்த சித்தார்த் அகில், 3 ரன்களில் அவுட்டானதால், 6.5 ஓவர்களில், 40 ரன்களுக்கு, 3 விக்கெட்களை இழந்து, மங்களூரு அணி தத்தளித்தது.
அதன் பின் வந்த, பிரஜ்வல் பவன், கருண் நாயருடன் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இவரும், 35 ரன்களிலும் ஆட்டம் இழந்தார்.
அதன் பின் வந்தவர்கள் 11, 10, 2 என சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். முடிவில், 20 ஓவரில் 9 விக்கெட்களை இழந்து, 169 ரன்கள் எடுத்திருந்தது.
குல்பர்கா மிஸ்டிக் அணி சார்பில் கிராந்தி குமார் 3, சுஹான் புருஷோத்தம் 2, சந்தோஷ் ஹட்டி, நரோன்ஹா, ஆதித்யா நாயகர், தலா, ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.
அடுத்து குல்பர்கா அணி களம் இறங்கியது. துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய நரோன்ஹா, ஆரவ் மகேஷ் ஆகியோர் சிறப்பாக விளையாடினர். இருவரும் சேர்ந்து 51 பந்துகளுக்கு 70 ரன்கள் சேர்த்தனர். 8.3வது ஓவரில் பிரித்விராஜ் ஷெகாவத் பந்தில், ஆரவ் மகேஷ், 27 ரன்களில் ஆட்டம் இழந்தார். 10.1வது ஓவரில், அணி 77 ரன்கள் எடுத்திருந்தபோது நரோன்ஹா ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த திப்பா ரெட்டி, 8 பந்துகளில், 7 ரன்கள் மட்டுமே எடுத்து, ஷ்ரேயாஸ் கோபால் பந்தில் வெளியேறினார்.
அடுத்து வந்த துருவ் பிரபாகர், மணிஷ் பாண்டேயுடன் சேர்ந்து, 28 பந்துகளில் 40 ரன்களை விளாசினர். 15.4வது ஓவரில் அணி 122 ரன்கள் எடுத்திருந்தபோது, சந்தோஷ் சிங் பந்தில் துருவ் பிரபாகர் வெளியேறினார்.
அவரை தொடர்ந்து ஆகாஷ் மகேஷ் ஒரு ரன்னிலும், அணியின் கேப்டன் கிராந்தி குமார் 15 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தும் பலனளிக்கவில்லை.
போட்டியின் நிறைவில், 20 ஓவர்களுக்கு, 7 விக்கெட்களை இழந்து, 166 ரன்கள் மட்டுமே குல்பர்கா மிஸ்டிக் பெற்றது.
இதன் மூலம், 3 ரன்கள் வித்தியாசத்தில், கோஸ்டல் கிங்ஸ் மங்களூரு 'திரில்' வெற்றி பெற்றது.
