ADDED : ஜூலை 09, 2026 11:53 PM
கலபுரகி: கலபுரகி நகரின் பல்வேறு இடங்களில், நேற்று முன் தினம் நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. வீடுகளில் இருந்த பொருட்கள் சிதறி விழுந்ததில், மக்கள் பீதியடைந்து வெளியே ஓடி வந்தனர்.
கலபுரகி நகரின், ஹரிகிருஷ்ண நகர், மஹாவீர் நகர் உட்பட பல்வேறு பகுதிகளில், நேற்று அதிகாலை 1:30 மணிக்கு, திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. வீட்டில் இருந்த பாத்திரங்கள், பொருட்கள் சிதறி விழுந்தன. பீரோ, கட்டில் தள்ளாடின.
கலக்கம் அடைந்த மக்கள், வீடுகளில் இருந்து வெளியே ஓடி வந்தனர். மீண்டும் வீட்டுக்குள் செல்ல பயந்து, இரவு முழுதும் வெளியே திறந்த வெளியில் அமர்ந்திருந்தனர். 4 - 5 விநாடிகள் வரை நிலநடுக்கம் ஏற்பட்டது.
இது குறித்து, இயற்கை பேரிடர் கண்காணிப்பு நிலைய வல்லுநர்கள் கூறியதாவது:
கலபுரகியில் நேற்று அதிகாலை நடந்திருப்பது, சாதாரண நிலநடுக்கம் தான். இத்தகைய நிலநடுக்கத்தால், எந்த அபாயமும் ஏற்படாது.
எனவே, பொதுமக்கள் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நிலநடுக்கம் ஏற்பட்ட இடங்களை, மாவட்ட நிர்வாகம் உன்னிப்பாக கண்காணிக்கிறது. பொதுமக்கள் பீதியடைய வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
