/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
8,000 பெண்களிடம் ரூ.12 கோடி மோசடி: மஹாராஷ்டிரா நபருக்கு வலை
/
8,000 பெண்களிடம் ரூ.12 கோடி மோசடி: மஹாராஷ்டிரா நபருக்கு வலை
8,000 பெண்களிடம் ரூ.12 கோடி மோசடி: மஹாராஷ்டிரா நபருக்கு வலை
8,000 பெண்களிடம் ரூ.12 கோடி மோசடி: மஹாராஷ்டிரா நபருக்கு வலை
ADDED : அக் 28, 2025 04:21 AM
பெலகாவி: வீட்டில் இருந்தே பணியாற்றும் வாய்ப்பு கிடைக்க செய்வதாக நம்ப வைத்து, ஆயிரக்கணக்கான பெண்களிடம், 12 கோடி ரூபாய் வரை வசூலித்து, தப்பி ஓடியவரை போலீசார் தேடுகின்றனர்.
மஹாராஷ்டிராவை சேர்ந்தவர் பாபா சாஹேப் கோலேகர், 40. இவர் சில ஆண்டுகளாக, பெலகாவி நகரில் வசித்தார்.
தன்னை அஜய் பாட்டீல் என, அறிமுகம் செய்து கொண்டார். பெண்களை குறிவைத்த இவர், வீட்டில் இருந்தே ஊதுபத்தி செய்து, பணம் சம்பாதிக்கலாம் என, ஆசை காட்டினார்.
அடையாள அட்டை தயாரிக்க வேண்டும் என கூறி, ஒவ்வொரு பெண்ணிடமும் 2,500 முதல் 5,000 ரூபாய் வரை வசூலித்தார்.
அது மட்டுமின்றி, ஊதுபத்திகளை வீட்டுக்கு கொண்டு வர, ஆட்டோ கட்டணம் என கூறி, கூடுதலாக 5,000 ரூபாய் வரை, வசூலித்து கொண்டார்.
பணம் கொடுத்த பெண், வேறு ஒரு பெண்ணை அறிமுகம் செய்யும்படி கூறினார். இதே சங்கிலி தொடராக, பெண்களை வலையில் விழ வைத்தார்.
இதேபோன்று, 8,000 பெண்களிடம் 12 கோடி ரூபாய் வரை வசூலித்தார். வீட்டில் இருந்து ஊதுபத்திகளை பேக்கிங் செய்து கொடுத்தால், மாதந்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் என, பெண்கள் நம்பினர். ஆனால் பணத்தை வசூலித்து, இரவோடு, இரவாக அவர் தலைமறைவானார்.
பணம் கொடுத்து ஏமாந்த பெண்கள் பலரும், நேற்று முன்தினம் பெலகாவி போலீஸ் நிலையத்துக்கு சென்று, புகார் அளித்தனர்.
பாபா சாஹேப் கோலேகர், மஹாராஷ்டிராவில் இருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அவரை தேடி பெலகாவி போலீசார் சென்றுள்ளனர்.
பணம் கொடுத்து ஏமாந்த லட்சுமி காம்ப்ளே கூறியதாவது:
என் கணவர் சமீபத்தில் காலமானார். குடும்பத்தை நிர்வகிக்க எனக்கு ஒரு வேலை தேவைப்பட்டது.
வீட்டில் இருந்தே ஊதுபத்தி பேக்கிங் செய்யும் வேலை இருப்பதாக, சில பெண்களிடம் இருந்து தெரிந்து கொண்டேன். எனவே பணம் கொடுத்தேன்.
என்னை போன்று பல பெண்கள், பணம் கொடுத்து ஏமாந்துள்ளனர். போலீசார் பணத்துடன் ஓடிய நபரை கண்டுபிடித்து, எங்கள் பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

