/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மஹாராஷ்டிரா அணை திறப்பால் பெலகாவியில் வெள்ளம்; கோகாக் நகரில் பொது மக்கள் தவியாய் தவிப்பு
/
மஹாராஷ்டிரா அணை திறப்பால் பெலகாவியில் வெள்ளம்; கோகாக் நகரில் பொது மக்கள் தவியாய் தவிப்பு
மஹாராஷ்டிரா அணை திறப்பால் பெலகாவியில் வெள்ளம்; கோகாக் நகரில் பொது மக்கள் தவியாய் தவிப்பு
மஹாராஷ்டிரா அணை திறப்பால் பெலகாவியில் வெள்ளம்; கோகாக் நகரில் பொது மக்கள் தவியாய் தவிப்பு
ADDED : ஆக 21, 2025 06:56 AM

பெங்களூரு : கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக பெலகாவியில் தொடர் மழையால், மக்கள் தத்தளிக்கின்றனர். ஆறுகள், அணைகள், ஏரிகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது . கோகாக் நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
கர்நாடகாவின் பெலகாவி, கதக், தாவணகெரே, ஹாவேரி, சிக்கமகளூரு, சிக்கபல்லாபூர், விஜயபுரா உட்பட, பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. ஆறுகள், ஏரிகளில் அபாய கட்டத்தை தாண்டி, வெள்ளம் பாய்கிறது.
விஜயபுராவில் அலமாட்டி அணை நிரம்பி, உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. ஆற்றங்கரையில் ஒட்டியுள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய பீதி ஏற்பட்டுள்ளது.
பெலகாவியில் தொடர் மழை பெய்வதால், ஆறுகள், ஏரிகள், கால்வாய்கள், அணைகளில் வெள்ளம் பாய்ந்தோடுகிறது. இதற்கிடையே மஹாராஷ்டிராவின் கொய்னா அணையில் இருந்து, பெருமளவில் தண்ணீர் திறந்து விடுவதால், பெலகாவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கோகாக் நகரை வெள்ளம் சூழ்ந்துள்ளது. வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதால், மக்கள் வெளியே வர முடியாமல் அவதிப்படுகின்றனர்.
கோகாக்கின் கட்டபிரபா, மார்க்கண்டேயா ஆறுகளில் நீர் மட்டம் அதிகரித்துள்ளது.
கோகாக் நகருக்கு இணைப்பு ஏற்படுத்தும், மாநில நெடுஞ்சாலையின் லோலசூரா பாலம், முழுதுமாக நீரில் மூழ்கியுள்ளது.
அக்கம், பக்கத்து விளை நிலங்களில் புகுந்ததால் பயிர்கள் பாழாகின. கோகாக் நீர் வீழ்ச்சிக்கு இணைப்பு ஏற்படுத்தும் சிக்கோளி பாலம் மூழ்கும் கட்டத்தை எட்டியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வாகன போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் காலை 8:30 மணி முதல் நேற்று மாலை 5:30 மணி வரை பெலகாவி பரவாட் பகுதியில் அதிகபட்சமாக 10.45 செ.மீ., மழை பெய்து உள்ளது.
உத்தர கன்னடாவின் ஹலகேரியில் 10.05 செ.மீ., மனிவாமனேயில் 9.95 செ.மீ., வயிலவாடாவில் 8.85 செ.மீ., ஜகலபேட்டில் 8.10 செ.மீ., மழை பெய்து உள்ளது.
கட்டப் பிரபா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், பெலகாவி மாவட்டம், மூடலகி தாலுகாவின், முசகுப்பியில் உள்ள லட்சுமி கோவில் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
பெலகாவி, உடுப்பி மற்றும் உத்தரகன்னடாவில், இன்றும் கன மழை பெய்யும் அறிகுறிகள் தென்படுவதால், மூன்று மாவட்டங்களிலும், மஞ்சள் அலெ ர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.