பாலகிருஷ்ணா மீது செருப்பு வீசப்படும் 'மாஜி' எம்.எல்.ஏ., மஞ்சுநாத் எச்சரிக்கை
பாலகிருஷ்ணா மீது செருப்பு வீசப்படும் 'மாஜி' எம்.எல்.ஏ., மஞ்சுநாத் எச்சரிக்கை
ADDED : செப் 01, 2026 08:03 PM

ராம்நகர்: ''மத்திய அமைச்சர் குமாரசாமி மீது பொய் குற்றச்சாட்டு கூறினால், அமைச்சர் பாலகிருஷ்ணா மீது செருப்பு வீசப்படும்,'' என, ம.ஜ.த., முன்னாள் எம்.எல்.ஏ., மஞ்சுநாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராம்நகரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மனைவியின் மொபைல் போன் உரையாடலை ஒட்டு கேட்டார் என்று மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி பற்றி, மாநில அமைச்சர் பாலகிருஷ்ணா கூறியுள்ளார்.
தான் கூறியதை உண்மை என அவர் நிரூபித்து காட்ட வேண்டும். எங்கள் தலைவர் மீது தனிப்பட்ட முறையில் தாக்குதல் நடத்தினால், சிக்கபல்லாபூர் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பிரதீப் ஈஸ்வர் மீது செருப்பு வீசப்பட்ட நிலை தான், பாலகிருஷ்ணாவுக்கும் ஏற்படும்.
தேவகவுடா குடும்பத்தை விமர்சித்தால், காங்கிரசில் தனக்கு மகுடம் கிடைக்கும் என்று பாலகிருஷ்ணா நினைக்கிறார். தேவகவுடா, குமாரசாமியை விமர்சித்த பலர் அரசியலில் இருந்தே காணாமல் போய் உள்ளனர்.
பாலகிருஷ்ணா ம.ஜ.த., - எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, 600 கோடி ரூபாய் ஊழல் செய்தது உண்மை. இது பொய் என்றால், சாமுண்டீஸ்வரி கோவிலுக்கு வந்து சத்தியம் செய்யட்டும். இல்லையென்றால் பகிரங்க விவாதம் நடத்த வரட்டும்.
தலித் நபரை மிரட்டி பாலகிருஷ்ணாவும், அவரது குடும்பத்தினரும் நிலத்தை பறித்தனர். அமைச்சரின் மனைவி மீதும் வழக்கு உள்ளது. ஆனால், அதிகாரிகளை பலிகடா ஆக்கி விட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
