கர்நாடகாவுக்கு நிவாரணம் மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
கர்நாடகாவுக்கு நிவாரணம் மல்லிகார்ஜுன கார்கே கடிதம்
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 07:52 PM

பெங்களூரு: ‘கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. விவசாயிகள் விளைச்சலை இழந்து நஷ்டம் அடைந்துள்ளனர். எனவே உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்’ என, மத்திய அரசை காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடிக்கு, அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது:
கர்நாடகாவில் கடும் வறட்சி நிலவுகிறது. செப்டம்பரில், 58 சதவீதம் மழை பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் பரவலாக நஷ்டம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, 31 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள், நெருக்கடியில் சிக்கியுள்ளன. மழையின்றி விளைச்சல் சேதம் அடைந்துள்ளது.
வறட்சியால் மாநிலத்தில், 18 ஆயிரத்து 748.23 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே உடனடியாக கர்நாடகாவுக்கு விதிமுறைப்படி, 3,705.30 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். ஏற்கனவே, வறட்சி பாதிப்பு பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
காவிரி உட்பட பல நீர் பாசன அணைகளில் நீர் மட்டம் குறைந்துள்ளது. குடிநீர் பிரச்னை உள்ளது.
அதே போல நீர் மின் உற்பத்திக்கு தண்ணீர் வழங்கும் அணைகளிலும் நீர் மட்டம் குறைந்ததால் மின் உற்பத்தியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
மின் வசதிக்கு கூடுதல் நிதி வழங்க வேண்டும். அரசியல் கருத்து வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, மக்களின் கஷ்டங்களை மனதில் கொண்டு, மனிதநேயம் அடிப்படையில், மாநிலத்துக்கு அவசரமாக நிவார ணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
