/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் சித்தராமையாவுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு!: 'ஹனி டிராப்' விவகாரம் குறித்து அவசர ஆலோசனை
/
முதல்வர் சித்தராமையாவுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு!: 'ஹனி டிராப்' விவகாரம் குறித்து அவசர ஆலோசனை
முதல்வர் சித்தராமையாவுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு!: 'ஹனி டிராப்' விவகாரம் குறித்து அவசர ஆலோசனை
முதல்வர் சித்தராமையாவுடன் மல்லிகார்ஜுன கார்கே சந்திப்பு!: 'ஹனி டிராப்' விவகாரம் குறித்து அவசர ஆலோசனை
ADDED : மார் 24, 2025 04:58 AM

கர்நாடக கூட்டுறவு துறை அமைச்சர் ராஜண்ணா. இவர், தன்னை ஒரு கும்பல் ஹனி டிராப்பில் சிக்க வைக்க, இரண்டு முறை முயற்சி செய்தது என்று கடந்த 20ம் தேதி சட்டசபையில் கூறினார்.
மாநில, தேசிய அரசியல் தலைவர்கள் 48 பேரின் வீடியோக்கள் அடங்கிய, 'பென் டிரைவ்' இருப்பதாகவும், 'சிடி' மற்றும் பென் டிரைவ் தொழிற்சாலையாக கர்நாடகா மாறி விட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட, பா.ஜ., கடந்த 21ம் தேதி சட்டசபையில் போராட்டம் நடத்தியது. சபாநாயகர் மீது காகிதங்கள் கிழித்து வீசப்பட்டன. இதையடுத்து 18 பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் ஆறு மாத காலம், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர்.
ஒரு மணி நேரம்
ஹனி டிராப் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு கொடுக்க வேண்டும், முதல்வர் சித்தராமையா ராஜினாமா செய்ய வேண்டும் என்று, பா.ஜ., தலைவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
தன் மீதான ஹனி டிராப் முயற்சி குறித்து, அமைச்சர் ராஜண்ணா இன்னும் புகார் கொடுக்கவில்லை. ஹனி டிராப் பிரச்னை தேசிய அளவில் எதிரொலித்து உள்ளது.
காங்கிரஸ் மேலிட தலைவர்களை சந்தித்து, விளக்கம் அளிக்க டில்லி செல்லவும் சித்தராமையா தயாராக இருந்தார். இந்நிலையில் பெங்களூரில் உள்ள சித்தராமையாவின் காவிரி இல்லத்திற்கு, நேற்று காலை 10:00 மணிக்கு, காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, அவரது மகனும், மாநில தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான பிரியங்க் கார்கே ஆகியோர் சென்றனர்.
அறையின் கதவை அடைத்து விட்டு, ஒரு மணி நேரமாக மூன்று பேரும் அவசர ஆலோசனை நடத்தினர்.
உடல்நலம்
பின், வெளியே வந்த மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், ''சித்தராமையா மூட்டு வலியால் பாதிக்கப்பட்டு உள்ளார். அவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க வந்தேன். சீக்கிரம் உடல்நலம் சரியாக வேண்டும் என்று வாழ்த்து கூறினேன்,'' என்றார்.
பிரியங்க் கார்கே கூறுகையில், ''முதல்வரை சந்தித்து நானும், காங்கிரஸ் தலைவரும் உடல்நலம் விசாரித்தோம். சில அரசியல் விவகாரங்கள் குறித்தும் பேசினோம்,'' என்றார்.
சித்தராமையா உடனான சந்திப்பின் போது, ராஜண்ணாவை ஹனி டிராப் செய்ய முயன்றது, இந்த விவகாரத்தில் பா.ஜ., நடத்தும் போராட்டம் குறித்து, மல்லிகார்ஜுன கார்கே ஆலோசித்து உள்ளார். அமைச்சருக்கே இந்த நிலை என்றால் என்ன செய்வது என்று கார்கேயிடம், சித்தராமையா தனது ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், நேற்று முன்தினம் சித்தராமையாவை, ராஜண்ணாவின் மகனும், காங்கிரஸ் எம்.எல்.சி.,யுமான ராஜேந்திரா சந்தித்து பேசினார். ஹனி டிராப் குறித்து முதல்வரிடம் எடுத்து கூறினார். பின், அவர் அளித்த பேட்டியில், ''ஹனி டிராப் குறித்து போலீசில் புகார் அளிக்கும்படி, முதல்வர், என்னிடம் கூறி உள்ளார். திங்கள் அல்லது செவ்வாய் கிழமை டி.ஜி.பி.,யிடம் நேரில் புகார் அளிப்பேன்,'' என்றார்.
நெருக்கடி இல்லை
உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் அளித்த பேட்டி:
ஹனிடிராப் தொடர்பாக, உயர்மட்ட விசாரணை நடத்தப்படும். இதற்கான ஏற்பாடுகள் நடக்கிறது. அமைச்சர் ராஜண்ணா இதுவரை புகார் ஏதும் அளிக்கவில்லை. ஆனால் சட்டசபையில் இது பற்றி விவாதிக்கப்பட்டது. இவ்வளவு நடந்த பின் மவுனமாக இருக்க முடியுமா. அரசு சார்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை தொடர்பாக, ஆலோசனை நடந்தது.
முதல்வருடன் ஆலோசித்து, இறுதி முடிவு எடுக்கப்படும். சட்டசபையில் இதுவரை நடக்காத சம்பவங்கள், ஹனிடிராப் விஷயத்தில் நடந்தது. எனவே, இனியும் தாமதிப்பது நல்லது அல்ல. முதல்வருடன் ஆலோசிப்பதற்கு முன், உள்துறை தயாராக வேண்டும். ராஜண்ணா புகார் அளித்தவுடன், நடவடிக்கை எடுக்கப்படும்.
ஹனி டிராப் வழக்கை சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கும்படி பா.ஜ.,வினர் வலியுறுத்துகின்றனர். மாநில அரசு உயர்மட்ட விசாரணை நடத்தும். பா.ஜ.,வினர் கூறியபடி செய்ய முடியாது. இந்த விஷயத்தை அரசு தீவிரமாக கருதுகிறது. அமைச்சர் ராஜண்ணாவுடன், 48 பேர் ஹனி டிராப்புக்கு ஆளாகியுள்ளனர். இதை பற்றி வீடியோ மற்றும் வீடியோக்கள் உள்ளது பற்றி, எனக்கு எந்த தகவலும் தெரியாது.
சட்டசபையில், திடீரென இந்த விஷயத்தை குறிப்பிட்டதால், காங்கிரஸ் மேலிடம் அதிருப்தி தெரிவித்தது குறித்தும், எனக்கு தெரியாது. இந்த விஷயத்தில் யாரும் எனக்கு நெருக்கடி தரவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.