ADDED : ஜூலை 10, 2025 11:05 PM
ஹாசன்: சொத்து தகராறில் தந்தை மற்றும் அண்ணனை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.
ஹாசன் மாவட்டம், ஹொளே நரசிபுராவின், கங்கூரு கிராமத்தில் வசித்தவர் தேவகவுடா, 70. இவரது மனைவி ஜெயம்மா, 68. தம்பதிக்கு மஞ்சுநாத், 50, மோகன், 47, என்ற மகன்கள் உள்ளனர்.
ஒரே வீட்டில் தந்தை, தாயுடன் மஞ்சுநாத் வசித்தார். ஆனால் அதே வீட்டில் இருந்தாலும், மோகன் தனியாக வசிக்கிறார். தனியாக சமைத்து சாப்பிடுவார்.
இரண்டு மகன்களுக்கும் இன்னும் திருமணமாகவில்லை. சமீப நாட்களாக சொத்து தொடர்பாக குடும்பத்தில் தகராறு இருந்துள்ளது. சொத்துகளை பிரித்துத் தரும்படி, மோகன் தொல்லை கொடுத்தார். இதற்கு தந்தை சம்மதிக்கவில்லை.
வழக்கம் போன்று நேற்று முன் தினம் இரவும், சண்டை நடந்தது. கோபமடைந்த மோகன், குடித்துவிட்டு வந்து மீண்டும் தகராறு செய்தார். நேற்று அதிகாலை உறக்கத்தில் இருந்த தந்தையை, அண்ணனை அரிவாள், கட்டைகளால் தாக்கிக் கொலை செய்தார். தாய் தடுத்தும் முடியவில்லை.
நேற்று காலையே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அக்கம், பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த ஹொளே நரசிபுரா ஊரக போலீசார், கொலை செய்துவிட்டு வீட்டிலேயே படுத்து துாங்கிக் கொண்டிருந்த மோகனை கைது செய்தனர்.