திருமணம் செய்ய வலியுறுத்திய காதலியை கொன்ற ஏட்டு கைது
திருமணம் செய்ய வலியுறுத்திய காதலியை கொன்ற ஏட்டு கைது
UPDATED : நவ 05, 2026 11:51 PM
ADDED : நவ 04, 2026 07:07 PM

பெலகாவி: நான்கு ஆண்டுகளாக காதலித்து, திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து, இளம்பெண்ணை கொலை செய்த, போலீஸ் ஏட்டு கைது செய்யப்பட்டார்.
பெலகாவி மாவட்டம், ராய்பாக் தாலுகாவின், ஹாருகேரி கிராமத்தில் வசிப்பவர் பசப்பா சித்தப்பா, 30. இவர் ஆயுதப்படையில் ஏட்டாக பணியாற்றுகிறார்.
இவரும் இதே கிராமத்தை சேர்ந்த ரக்ஷிதா, 25, என்பவரும்
கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.
நான்கு ஆண்டுகளாகியும், திருமணம் செய்து கொள்வதில் பசப்பா ஆர்வம்காட்டவில்லை. இதனால் ரக்ஷிதா திருமணம் செய்து கொள்ளும்படி, நெருக்கடி கொடுத்தார். எரிச்சல் அடைந்த பசப்பா, ரக்ஷிதாவை கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
கடந்த அக்டோபர் 28ம் தேதி, வெளியே செல்லலாம் என கூறி, பசப்பா, ரக்ஷிதாவை கோகாக் நீர்வீழ்ச்சி அருகில் அழைத்து சென்றார்.
அங்கு அவரை கட்டையால் அடித்து, கழுத்தை நெரித்து கொலை செய்தார். உடலை அருகில் உள்ள முட்புதரில் வீசிவிட்டு ஊருக்கு சென்று விட்டார்.
ரக்ஷிதாவை காணவில்லை என, அவரது பெற்றோர் தேடுவது தெரிந்து, தானும் அவர்களுடன் தேடுவது போல நடித்தார்.
அதன் பின், ரக்ஷிதாவின் சகோதரர், ஹாரோகேரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீசார் விசாரித்த போது, ரக்ஷிதா காணாமல் போன நாளன்று, பசப்பாவுடன் சென்றது தெரிந்தது.
இதையடுத்து போலீசார், அவரை வரவழைத்து விசாரித்த போது, ரக்ஷிதாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர்.
