திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொன்றவர் கைது
திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலியை கொன்றவர் கைது
ADDED : மே 17, 2026 11:26 PM

ஹெப்பகோடி: திருமணத்திற்கு வற்புறுத்தியதால் கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற கள்ளக்காதலன் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பெங்களூரு ஹெப்பகோடியில் உள்ள திருப்பாலை ஏரி அருகில், கடந்த 8ம் தேதி, கொலையான நிலையில் வடமாநில பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது.
போலீசார் நடத்திய விசாரணையில் அந்த பெண் அசாம் மாநிலத்தின் அஞ்சலி, 47, என்பதும், ஹெப்பகோடியில் வாடகை வீட்டில் தங்கி இருந்து கட்டட வேலை செய்ததும் தெரிந்தது.
அவர் பயன்படுத்திய மொபைல் நம்பர் மூலம் போலீசார் விசாரித்ததில், அசாம் மாநிலத்தின் ரத்தன்தாஸ், 37 என்பவரிடம் அடிக்கடி பேசியது தெரிந்தது. ஹெப்பகோடியில் வசித்த அவரை நேற்று முன்தினம் போலீசார் பிடித்தனர்.
முன்னுக்கு பின் முரணாக பேசினார். கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், அஞ்சலியின் கழுத்தை நெரித்து கொன்றதை ஒப்பு கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
அஞ்சலிக்கு திருமணம் ஆகி கணவர், பிள்ளைகள் உள்ளனர். அவர்கள் அசாமில் வசிக்கின்றனர். இதுபோல ரத்தன்தாஸ் மனைவி, பிள்ளைகளும் அசாமில் உள்ளனர். ரத்தன்தாஸ் பெங்களூரில் வேலை செய்தார்.
ஒரே மாநிலம் என்பதால் அஞ்சலிக்கும், ரத்தன்தாஸுக்கும் பழக்கம் ஏற்பட்டது. அந்த பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து உள்ளனர்.
ரத்தன்தாஸை திருமணம் செய்ய வேண்டும் என்று அஞ்சலி நினைத்து உள்ளார். ஆனால் ரத்தன்தாஸ் பிடிகொடுக்கவில்லை. கடந்த 8ம் தேதி திருப்பாலை ஏரிக்கு அஞ்சலியை அழைத்து சென்ற ரத்தன் தாஸ், உல்லாசமாக இருக்க அழைத்து உள்ளார்.
மறுப்பு தெரிவித்த அஞ்சலி, திருமணம் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளார். இதனால் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்தது போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
