ADDED : ஜூன் 12, 2026 03:02 AM

பெங்களூரு: பெங்களூரு கோரமங்களாவில், 'டிஜிட்டல் டிசைன்ஸ் எஜுகேஷன் மிஷன்' என்ற பெயரில், நிறுவனம் நடத்தி வருபவர் ராஜாரெட்டி. இவர் தன் நிறுவனம் பெயரில், மாணவர்களின் மொபைல் போன் எண்களை சேகரித்தார்.
தன் ஊழியர்களை இந்த எண்களில் தொடர்பு கொண்டு, மாணவர்களிடம் பேச வைப்பார். பெங்களூரின் பிளாரன்ஸ், கலா நிகேதன், எம்.வி.ஜே., திப்பு சுல்தான் உட்பட பல்வேறு கல்லுாரிகளில் சீட் பெற்றுத்தருவதாக நம்ப வைத்தனர்.
எஸ்.எஸ்எல்.சி., - பி.யு.சி., படிக்காதவர்களுக்கும் கூட பட்டப்படிப்பு கல்லுாரிகளில் அட்மிஷன் பெற்றுத்தருவதாக கூறினர். இதை நம்பிய மாணவர்கள் பணம் கொடுத்தனர்.
மாணவர்களிடம் பணம் பெற்று கொண்டு, போலியான எஸ்.எஸ்.எல்.சி., - பி.யு.சி., மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து, விற்று வந்தனர்.
இது குறித்து, தகவலறிந்த சி.சி.பி ., போலீசார், நேற்று காலை கோரமங்களாவில் உள்ள ராஜாரெட்டியின் நிறுவனத்தில், திடீர் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றினர். இவரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள, இவரது கூட்டாளி ஆர்யனை தே டுகின்றனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
மாணவர்களுக்கு தன் கூட்டாளி ஆர்யன் என்பவர் மூலமாக, போலி மதிப்பெண் சான்றிதழ்களை, கூரியரில் ராஜாரெட்டி அனுப்பியுள்ளார். ஒரு மதிப்பெண் சான்றிதழுக்கு 30,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை வசூலித்துள்ளார், இதுவரை 50 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு, போலியான மதிப்பெண் சான்றிதழ் தயாரித்து விற்றுள்ளார். தலைமறைவான ஆர்யனை தேடுகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
