ADDED : ஜூன் 12, 2026 03:01 AM

பெங்களூரு: மகள் கொலை வழக்கில், தேடப்பட்டு வந்த தாய் பிரியங்கா, சக்லேஸ்புராவில் நேற்று போலீசாரிடம் சிக்கினார். அவரை பெங்களூருக்கு அழைத்து வந்து, தீவிர விசாரணை நடத்துகின்றனர்.
தாவணகெரே நகரில் பள்ளி நடத்தி வருபவர் பிரவீன். இவரது மனைவி பிரியங்கா வக்கீல். இவர்களுக்கு தன் கல்லுாரி நண்பர் மோகன் அறிமுகமான பின், பிரியங்காவின் குணம் மாறியது. ரியல் எஸ்டேட் தொழிலதிபரான மோகனுடன், கள்ளத்தொடர்பு வைத்து கொண்டார். இதையறிந்து கோபமடைந்த கணவர், மனைவியை திட்டி கண்டித்தார்.
ரகசிய திருமணம் மனம் மாறாத பிரியங்கா, கணவரிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துவிட்டு, தன் இளைய மகள் வெண்ணிலாவை, 6, அழைத்து கொண்டு, பெங்களூரு வந்தார்.
காடுகோடியில் வில்லா ஒன்றில், மோகனுடன் 'லிவிங் டு கெதரில்' இருந்தார். இருவரும் காசியில் ரகசிய திருமணம் செய்து கொண்டனர். மோகனும் ஏற்கனவே திருமணமானவர். இரண்டு குழந்தைகளும் உள்ளன. ஆனால் அவர்களை உதறிவிட்டு, பிரியங்காவுடன் வசிக்கிறார்.
இந்நிலையில், மார்ச் 24ம் தேதியன்று, சிறுமி வெண்ணிலா மர்மமான முறையில் இறந்தார். மகளின் இறப்பில் சந்தேகமடைந்த பிரவீன், காடுகோடி போலீசாரிடம் புகார் செய்தார்.
போலீசாரும் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த அறிக்கையை, வெளிநாட்டில் டாக்டராக பணியாற்றும் தன் அக்காவுக்கு அனுப்பிய பிரவீன், மகள் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்து கொண்டார். போலீசாரிடமும் புகார் அளித்தார்.
ஒப்புதல் போலீசார் விசாரணையில் இறங்கியதும், பிரியங்கா தலைமறைவானார். போலீசார், மோகனை கைது செய்தனர். அவரிடம் விசாரித்த போது, சிறுமி வெண்ணிலாவை கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இந்திரா நகரில் பிரியங்கா ஷாப்பிங் செய்ய சென்ற போது, காரில் இருந்த வெண்ணிலா ஐஸ்கிரீம் கேட்டு, பிடிவாதம் பிடித்ததால் கோபமடைந்து சிறுமியின் வயிற்றில் உதைத்து, முகத்தை அழுத்தி கொலை செய்ததை விவரித்தார்.
மகளை கொலை செய்த மோகன் மீது, பிரியங்கா கோபப்படவில்லை. மாறாக, இந்த சம்பவத்தை மூடி, மறைக்க முன் வந்தார். மகளின் உடலை காரில் வைத்து கொண்டு, கோலாருக்கு சென்றனர்.
அங்குள்ள உணவகம் ஒன்றில், மோகனுடன் தன் பிறந்த நாள் பார்ட்டி நடத்தினார். அதன் பின் அங்கிருந்து, தங்களின் வில்லாவுக்கு சென்றனர். மறுநாள் காலையில் தனியார் மருத்துவமனைக்கு, சிறுமியை துாக்கி சென்று, 'உறக்கத்தில் இருந்து எழுந்திருக்கவில்லை' என, பொய்யாக கூறி நாடகமாடியது விசாரணையில் தெரிய வந்தது.
கமிஷனர் கண்டிப்பு மோகனிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார், மற்றொரு பக்கம் தலைமறைவான பிரியங்காவை தேடினர். நான்கைந்து நாட்களாக தேடியும், அவரை கண்டுபிடிக்கவில்லை. இதை கண்டித்த பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் சீமந்த்குமார் சிங், விசாரணை அதிகாரிகளை மாற்றினார்.
இக்குழுவினர் தீவிரமாக தேடியதில், ஹாசன் மாவட்டம், சக்லேஸ்புராவில் தன் நண்பரின் வீட்டில் இருந்த பிரியங்காவை, நேற்று மதியம் கைது செய்தனர். அவரை பெங்களூரு அழைத்து வந்தனர்.
பெங்களூரின் முதலாவது ஏ.சி., - ஜெ.எம்., நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். விசாரணை நடத்திய நீதிபதி அஜித் தேவரமனி, பிரியங்காவை ஐந்து நாட்கள், போலீஸ் கஸ்டடியில் ஒப்படைத்து உத்தரவிட்டார். போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தரும்படி, பிரியங்காவுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
