ஐ.பி.எல்., டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்றவர் கைது
ஐ.பி.எல்., டிக்கெட்டை கள்ளச்சந்தையில் விற்றவர் கைது
ADDED : ஏப் 18, 2026 06:03 AM

பெங்களூரு: ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி டிக்கெட்டுகளை சட்ட விரோதமாக விற்பனை செய்த, மைதானத்தில் உணவகத்தில் பணியாற்றி வந்தவர் கைது செய்யப்பட்டார்.
ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி, நாட்டின் பல பகுதிகளிலும் நடந்து வருகிறது. கடந்த 15ம் தேதி பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி இடையே போட்டி நடந்தது. இந்த போட்டியை காண வந்த, 180 ரசிகர்களுக்கு, 15,000 முதல் 19,000 ரூபாய் வரை, ஒருவர் டிக்கெட்டை விற்பனை செய்துள்ளார்.
இது தொடர்பாக, சி.சி.பி., எனும் மத்திய குற்றப் பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார், டிக்கெட் விற்பனை செய்த நபரை பிடித்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், மைதானத்தில் ஸ்ரீ லட்சுமி கேன்டீனில் பணியாற்றி வரும் சந்திரசேகர் என்பது தெரிந்தது.
அவரிடம் விசாரித்த போது, கே.பி.சி.ஏ., எனும் கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கத்தின் உறுப்பினர் கணேஷ் பரிஷத் என்பவர் தான், இந்த டிக்கெட்களை கொடுத்து விற்கும்படி கூறியதாக தெரிவித்து உள்ளார்.
இதையறிந்த கணேஷ் தலைமறைவாகி உள்ளார். சட்ட விரோதமாக டிக்கெட் விற்பனைக்கு உடந்தையாக இருந்த சில நிறுவனங்களின் அதிகாரிகள் மீதும் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
