/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொன்றவர் கைது
/
கள்ளக்காதலியை கழுத்தை நெரித்து கொன்றவர் கைது
ADDED : ஆக 25, 2025 04:18 AM
மைசூரு:உல்லாசம் அனுபவித்த பின் ஏற்பட்ட தகராறில், கள்ளக்காதலியின் கழுத்தை நெரித்து கொன்ற, கட்டட தொழிலாளி கைது செய்யப்பட்டு உள்ளார்.
மைசூரு ஹுன்சூர் கெரசனஹள்ளி கிராமத்தின் ரக் ஷிதா, 20. இவருக்கு ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின், கணவருடன் கேரளாவில் தங்கி இருந்து கூலி வேலை செய்தார். கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு, பெற்றோர் வீட்டிற்கு வந்து இருந்தார். ரக் ஷிதாவின் பெற்றோர் வீட்டின் அருகில் புதிதாக வீடு கட்டப்பட்டு வருகிறது.
பிரியப்பட்டணாவின் பெட்டதபுரா கிராமத்தின் சித்தராஜ், 28 கட்டட தொழிலாளியாக அங்கு வேலை செய்கிறார். ரக் ஷிதாவுக்கும், சித்தராஜுக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் இருந்தனர்.நேற்று முன்தினம் மைசூரு டவுன் சாலிகிராமத்திற்கு ரக் ஷிதாவை, சித்தராஜ் அழைத்து சென்றார். இருவரும் லாட்ஜ் சென்றனர்.
ரக் ஷிதாவை தனது மனைவி என்று கூறி, லாட்ஜில் சித்தராஜ் அறை எடுத்தார். லாட்ஜில் இருவரும் உல்லாசமாக இருந்து உள்ளனர். பின், அவர்களுக்குள் ஏதோ காரணத்திற்காக தகராறு ஏற்பட்டு உள்ளது.
கோபம் அடைந்த சித்தராஜ், ரக் ஷிதா கழுத்தை நெரித்து கொலை செய்தார். லாட்ஜ் ஊழியர்களிடம் சென்று, மின்சாரம் தாக்கி தனது மனைவி இறந்து விட்டதாக கூறினார். இதுபற்றி தகவல் அறிந்த சாலிகிராமம் போலீசார், லாட்ஜிற்கு சென்று சித்தராஜிடம் விசாரித்த போது, உண்மையை ஒப்பு கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.