கடன் கொடுக்க மறுத்தவர் அடித்துக்கொலை மூன்று பேருக்கு வலைவீச்சு
கடன் கொடுக்க மறுத்தவர் அடித்துக்கொலை மூன்று பேருக்கு வலைவீச்சு
ADDED : மார் 17, 2026 06:03 AM

வில்சன் கார்டன்: கடனாக, 50,000 ரூபாய் கொடுக்க மறுத்த மெக்கானிக்கை, ஹாக்கி மட்டையால் அடித்துக் கொன்ற மூன்று பேரை போலீசார் தேடிவருகின்றனர்.
பெங்களூரு வில்சன் கார்டனில் வசித்தவர் ரஷீத் பாஷா, 45. மெக்கானிக். இவர் நேற்று முன்தினம் புதிதாக தன் வீட்டின் அருகே அச்சகம் துவங்கினார். அங்கு வந்த மூன்று பேர் ரஷீத் பாஷாவிடம் பேச்சுக் கொடுத்தனர். 'புதிதாக அச்சகம் துவங்கி இருக்கிறாய். எங்களுக்கு, 50,000 ரூபாய் கொடு' என்று கேட்டு உள்ளனர். இதற்கு ரஷீத் மறுத்ததால், கடனாக பணம் தரும்படி கேட்டுள்ளனர். பணம் கொடுக்க மறுத்ததுடன், மூன்று பேரையும் திட்டி, ரஷீத் அங்கிருந்து அனுப்பினார்.
சிறிது நேரத்தில் அங்கு வந்த மூன்று பேரும், ஹாக்கி மட்டையால் ரஷீத்தை சரமாரியாக தாக்கினர். தலையில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். பணம் கொடுக்க மறுத்ததால் கொலை நடந்ததா அல்லது வேறு காரணமா என்ற கோணத்தில், வில்சன் கார்டன் போலீசார் விசாரிக்கின்றனர்.
தலைமறைவாக உள்ள மூன்று பேரையும் தேடி வருகின்றனர்.
